குமுறுகிறார் ஒரு பெண் மருத்துவர்

தன்னையும் தன் உயிரையும் நேசிப்பவர்களால்தான் மற்ற உயிர்களையும் நேசிக்க முடியும் என்ற நிலையில் தனது உயிரையே துச்சமென கருதி மருத்துவம் படிக்க இருந்த மாணவர்கள் முதல் நாள் இறந்ததில் எந்தவித நியாயமுமில்லை என்கிறார் சென்னையின் பெண் நல மருத்துவர் ஜெயஸ்ரீ
ஒரு உயிருக்கு நிகராக எதையுமே சொல்ல முடியாது கொண்டுவந்து நிறுத்தவும் முடியாது இறந்த மாணவர்களின் பெற்றோரிடம் கேட்டால்தான் தெரியும் அதன் மதிப்பும் மகத்துவமும்.
நீட் தேர்வு எழுதினாலே தனது மகனோ மகளோ டாக்டராகிவிடுவது போல பெற்றோர்கள் எண்ணி கொடுக்கும் அழுத்தம்தான் இங்கு பிரச்னையே
மருத்துவப் படிப்பை பெற்றோர்கள் மட்டும் விரும்பக்கூடாது மருத்துவராக வேண்டும் என்று மாணவர்கள் விரும்பவேண்டும்.அப்படியே மாணவர்கள் விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு தகுதியிருக்க வேண்டும் அதற்கு அப்போது நுழைவுத் தேர்வு இருந்தது இப்போது நீட் தேர்வு இருக்கிறது . சேர்ந்த பிறகு இந்த படிப்பை அணுஅணுவாக ரசித்து படிக்க வேண்டும் உயிர்களை காப்பாற்றும் உன்னத பணிக்கு தயராகிறோம் என்று எண்ணியே நாளும் படிக்க வேண்டும் சரியாகச் சொல்வதானால் தங்களை இந்த புனிதமான பணிக்காக அர்ப்பணித்துக் கொள்ளவே வேண்டும்.
காரணம் இதையும் எழுதிவைப்போம் என்று எழுதி தேர்வானவர்கள் அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் விரும்பிப் படிப்பவர்களுக்கு சொர்க்கமாகவும் விரும்பாமல் வந்தவர்களுக்கு நரகமாகவும் இருக்கும்.
சாக்கடை போன்ற இடங்களில் இருந்து கிளம்பக்கூடிய துர்நாற்றத்தை சுவாசிப்பவர்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு சொல்லும் ஒரு வார்த்தை ‛பொண நாத்தம் அடிக்குதுப்பா' என்பதுதான்.

மருத்துவம் படிக்க வருபவர்களுக்கு முதல் நாள் முதல் வகுப்பே பிணத்துடன்தான் ஆரம்பிக்கும் மக்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு சொல்லும் அந்த பொண நாற்றத்திற்கு எவ்வித குறையும் இருக்காது. மாஸ்க்கோ கையுறையோ கூட அணியக்கூடாது காரணம் அந்த சூழ்நிலை பின்னாளில்வாழ்க்கை முழுவதும் தொடரும் என்பதால் முதலில் இருந்தே பழகிக் கொள்ள வேண்டும் பல மாணவர்கள் வாந்தி எடுத்துவிடுவர் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகதான் வழிக்கு வருவர் .மிகுந்த சிரமங்கள் ,மிகுந்த கஷ்டங்கள்,, மிகவும் சகிப்புத்தன்மை இவையெல்லாம் இருந்தால்தான் அந்த ஐந்து வருட படிப்பை பயனுள்ளதாக படிக்க முடியும்.
முதல் வருட பாடம் (அனாட்டமி) உடல்கூறு பாடம் ரொம்ப ரொம்ப கடினமாக இருக்கும். அதனால் உடல்கூறு பாடத்தில் 40லிருந்து 50 சதவீதம் பேர் தோல்வி அடைவர். இந்த எலும்புகள், சதைகள், நரம்புகள் ,ரத்த நாளங்கள், உடலின் பல்வேறு பகுதிகளின் பெயர்கள் என பலவும் இலத்தின் மொழிப் பெயர்களாக இருக்கும் ,இறந்த உடலின் பாகங்களை வெட்டிப் பார்த்து புரிந்து படிக்கனும்.ரத்தப்பரிசோதனை பாடத்தில், எங்கள் ரத்தத்தையே எடுத்து பரிசோதிக்க வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள் ஏராளமாக இருக்கும் . .புதுப்புது மருந்துகளின் பெயர்கள் அதன் பக்க விளைவுகள் தெரிந்திருக்கணும்.
எங்களுக்கான புத்தகம் தலைகாணி மாதிரி இருந்தது என்பது கூட குறைவாக சொல்லும் வார்த்தை மெத்தை மாதிரி கனமாக இருக்கும், அவ்வளவு பெரிய பெரிய புத்தகங்களை படித்து அதில் இருக்கும் விஷயங்களை உள்வாங்கி அதை எழுதி பாஸ் பண்ணுவதோடு முடிந்துவிடாது படித்த விஷயங்களை நோயாளியிடம் சரியாக அமுல்படுத்த வேண்டும்.
பிளஸ் டூவில் கூடப் படித்தவர்கள் எல்லாம் நான்கு வருடத்தில் ஐடி படித்துவிட்டு வெளிநாடு திருமணம் கார் பங்களா என்று பிரமாதமாய் செட்டிலாகியிருப்பர் ஆனால் நாங்கள் மட்டும் அப்போதும் பெற்றோரிடம் செலவிற்கு வாங்கிக் கொண்டு படித்துக் கொண்டுதான் இருப்போம். நாம் பணம் சம்பாதிக்க படிப்பவர்கள் அல்ல மக்களை காப்பாற்றும் புனித பணிக்காக படைக்கப்பட்டவர்கள் என்று எங்களுக்கு நாங்களே நல்ல வார்த்தைகள் கூறிக்கொள்வோம்.
அப்படியே ஐந்து வருடங்கள் படித்தாலும் பெரிதாக மதிப்பு வந்துவிடாது மகப்பேறு,கண்,காது மூக்குக்கு என்று விசேஷமாக மேலும் சில வருடங்கள் படித்து எம்பிபிஎஸ் எம்.டி என்றானால்தான் டாக்டரே வரலாமா? என்று விசாரிக்கத் துவங்குவர்.
இப்படி வாழ்க்கையை வாழத்துவங்கவே முப்பது வயதாகிவிடும் அதன்பிறகு திருமணம் செய்து செட்டிலாகி பிறந்த இடத்தையும் புகுந்த இடத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதுவரை மாணவர்கள் பொறுமை காக்கிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் உள்ளீட்ட உற்றமும் சுற்றமும் பொறுமை காக்கவேண்டும். இந்த சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் சொல்வதால் நான் மருத்துவ தொழிலுக்கு எதிரானவள் என்று எண்ணிவிட வேண்டாம் புனிதம் மிக்க இந்த தொழிலுக்கு முழு அர்ப்பணிப்போடு வரவேண்டும் கூடுதலாக மிகுந்த மன உறுதியும் நம்பிக்கையும் வேண்டும் அந்த உறுதியும் நம்பிக்கையும் இல்லாதவர்கள்தான் தற்கொலை என்ற தவறான முடிவை எடுப்பர்.
தோல்வி இல்லாமல் வெற்றி மட்டுமே பெற்றவர்கள் யாரும் கிடையாது ஒவ்வொரு தோல்விக்கும் தற்கொலைதான் முடிவு என்றால் இந்த மண்ணில் புல் பூண்டுதான் மிஞ்சியிருக்கும் அதே போல சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல் அமைப்பினர் நல்லது செய்வதாக நினைத்து எரிகிற தீயில் எண்ணெயை ஊற்ற வேண்டாம்.நிவாரணத் தொகை கொடுப்பது கூட தற்கொலையைத் துாண்டும் ஒரு காரணியாக அமைந்துவிடும் என்று நீதிமன்றம் கண்டித்துள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒரு மருத்துவராக மிக முக்கியமான தகுதி ,துவளாத மனம், தைரியம் . அப்படிப்பட்ட குழந்தைகளை தான் நாம் உருவாக்க வேண்டும். மனதளவில் ஒருவர் தைரியமாக இருக்கிறார் என்றால் அவர் எந்த துறையிலும் ஜொலிப்பார். துருவ நட்சத்திரமாக பிரகாசிப்பார் அப்படிப்பட்ட துருவ நட்சத்திரமாக பிரகாசிக்க கூடிய திறமை நம் ஒவ்வொரு தமிழ் குழந்தையிடம் கட்டாயம் இருக்கிறது. அதை வெளிக்கொணர வேண்டியது, அவர்களுக்கான மன தைரியத்தைக் கொடுக்க வேண்டியது ,பெற்றோரின் கடமை, ஆசிரியருடைய கடமை, இந்த அரசினுடைய கடமை ,நம் சமுதாயத்தினுடைய கடமை.
-டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா
மொபைல் எண்:80560 87139