கிணத்துக்கடவு : ''நடிகர் சூர்யாவை நக்சலைட் சிந்தனையில் இருந்து, நடிகர் சிவக்குமார் நல்வழிபடுத்த வேண்டும்,'' என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

கிணத்துக்கடவிலுள்ள திருமண மண்டபத்தில், இந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:காங்., ஆட்சியில், தி.மு.க., அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. இத்தேர்வு, கம்யூ., ஆட்சி செய்கிற கேரளாவும், காங்., ஆட்சி செய்கிற மாநிலங்களிலும் நடந்துள்ளது.
தமிழகத்திலும், நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்விகள் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். தேர்வை கண்டு பயந்தவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நடிகர் சூர்யா, மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து தவறான சிந்தனையை மாணவர்களுக்கு திணிக்க கூடாது. தற்போது, சூர்யா திசை மாறி நக்சலைட் சிந்தனையுடைய அமைப்போடு ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களது 'அகரம் டிரஸ்ட்'டில், நக்சலைட் சிந்தனையுள்ளவர்கள் உள்ளனர். இதனை, அவரது தந்தையான நடிகர் சிவக்குமார் கண்டித்து, நல்வழிப்படுத்த வேண்டும். சூர்யா திருந்தாவிட்டால், அவரை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.