பொருளாதாரத்தை மீட்க போர் குணத்துடன் ரிசர்வ் வங்கி தயார் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொருளாதாரத்தை மீட்க போர் குணத்துடன் ரிசர்வ் வங்கி தயார்

Updated : செப் 18, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (3)
Share
RBI, Reserve Bank, பொருளாதாரம் , போர் குணம், தயார்,  ரிசர்வ் வங்கி, சக்திகாந்த தாஸ்

புதுடில்லி: ''கொரோனா தாக்கத்தால் சரிவடைந்த நாட்டின் பொருளாதாரம், இன்னும் மீட்சிப் பாதைக்கு முழுமையாக திரும்பவில்லை. என்றாலும், வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, போர்க் குணத்துடன் ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது,'' என,
அவ்வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அவர், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:கடந்த மார்ச்சில், கொரோனா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், நடப்பு, 2020 - 21ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ், 23.9 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது.

எனினும், தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது காலாண்டில், வேளாண், தயாரிப்பு துறைகளின் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளதை, குறியீடுகள் காட்டுகின்றன. வேலையில்லா திண்டாட்டம் குறித்து, சில தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில், இரண்டாவது காலாண்டில், பொருளாதார நடவடிக்கைகளில் ஓரளவு ஸ்திரத்தன்மை ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேரூன்றவில்லை


அதுபோல, மேலும் பல துறைகள் தொய்வில் இருந்து, சற்று முன்னேற்றம் காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இருந்தபோதிலும், நாட்டின் பொருளாதார மீட்சி இன்னும் முழுமையாக வேரூன்றவில்லை என்றே கூறலாம். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பொருளாதார மீட்சி, மெதுவாகவே நிகழும் என, கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பணப்புழக்கம், விலை உயர்வை கட்டுப்படுத்துவது உட்பட, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில், போர்க் குணத்துடன், ரிசர்வ் வங்கி தயார் நிலையில் உள்ளது.

தற்போது, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கொரோனா தாக்கம் மறைந்த பின், நிலையான, நீண்ட கால வளர்ச்சிக்கான கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான 'ரெப்போ' வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. நிதிச் சந்தையில் பணப்புழக்கம் சீராக இருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடன்களுக்கான வட்டிச் செலவினம் குறைந்துள்ளது.

முதலீட்டாளர் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் வேளையில், வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை காப்பதும், அவசியமாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது போல, வங்கிகள் மீண்டும், வாராக் கடன் நெருக்கடியில் சிக்காமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதர வளரும் நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் சர்வதேச ஏற்றுமதி மதிப்பு விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. எனவே, சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
முக்கியத்துவம்


இதற்காக, மின்சாரம், மின்னணு சாதனங்கள், தொலை தொடர்பு கருவிகள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். கொரோனாவால், சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலைமை சீராகும் போது, சுற்றுலாத் துறை வளர்ச்சி காணும். உணவு பாதுகாப்பு, உணவுப் பொருட்கள் வினியோகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், கொரோனா உணர்த்தியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


முக்கிய அம்சங்கள்


* கடன் மறுசீரமைப்பு தொடர்பாக, நிறுவனங்கள் அளித்த கோரிக்கைகளை, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.

* ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, குறிப்பாக வங்கியில் கடன் பெற்ற வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப போதிய நிதியாதாரம் இல்லாமல் தவிக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம்.

* நடப்பு நிதியாண்டில், ஏப்., - ஆக., வரை, சாதனை அளவாக, 3.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

* 100 வங்கி சாரா நிதி நிறுவனங்களை, ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எந்த பெரிய நிறுவனமும் முடங்க அனுமதிக்காது.

* புதிய கல்விக் கொள்கை, வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய சீர்திருத்தமாகும். கல்வித் துறைக்கான முதலீட்டை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதமாக உயர்த்துவதன் மூலம், மனித மூலதனம் அதிகரிக்கும்.

* கல்வித் துறையில் மேற்கொள்ளும் முதலீடு, சராசரி ஊதிய விகிதத்தை அதிகரிக்க துணைபுரியும்.

* புதிய கல்விக் கொள்கை போல, சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்கும் சீர்திருத்த திட்டம் வகுக்க வேண்டும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X