பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்., 30ல் வெளியாகிறது தீர்ப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

லக்னோ:பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, மிக நீண்ட காலமாக நடந்து வந்த, பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வரும், 30ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த, பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது.இந்த நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அங்கு, ஹிந்துக் கடவுளான, ராமருக்கு கோவில் கட்டலாம்' என, தீர்ப்பு அளித்தது.

அதன்படி, பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அடையாளம் தெரியாத, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீதான வழக்கு, லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அதேபோல், மசூதியை இடிக்க சதி செய்ததாக, அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கு, ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதை அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் உறுதி செய்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த, உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, 2017ல் உத்தரவிட்டது.

மேலும், லக்னோ மற்றும் ரேபரேலியில் உள்ள வழக்குகளை, லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டது.இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து, தீர்ப்பளிக்கவும், லக்னோ நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.அந்தக் காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு, வரும், 30ம் தேதிக்குள் தீர்ப்பளிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி உட்பட, 32 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.வழக்கின் தீர்ப்பு தேதியை நிர்ணயிப்பதற்காக, சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது, 'செப்., 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்' என,அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X