காதலர்கள் மோதலால் நடிகை தற்கொலை? பட தயாரிப்பாளரை தேடுகிறது போலீஸ்| Dinamalar

காதலர்கள் மோதலால் நடிகை தற்கொலை? பட தயாரிப்பாளரை தேடுகிறது போலீஸ்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
 காதலர்கள் மோதலால் நடிகை தற்கொலை? பட தயாரிப்பாளரை தேடுகிறது போலீஸ்

ஐதராபாத்:தெலுங்கு 'டிவி' நடிகை, ஸ்ராவணியை காதலித்த, பட தயாரிப்பாளர் உட்பட, மூன்று பேர் இடையே, மோதல் ஏற்பட்டதை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானாவின், ஐதராபாதில் உள்ள, மதுரா நகரைச் சேர்ந்தவர், ஸ்ராவணி. பல பிரபலமான, தெலுங்கு 'டிவி' தொடர்களில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், ஐதராபாதில் உள்ள இல்லத்தில், நடிகை ஸ்ராவணி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில், அவரது காதலர் தேவராஜ் ரெட்டி என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

ஸ்ராவணியை தாக்கியதாக, அவரது முன்னாள் காதலர் சாய் கிருஷ்ணா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, தெலுங்கில் வெற்றி பெற்ற, ஆர்எக்ஸ் 100 உட்பட சில திரைப்படங்களை தயாரித்துள்ள, அசோக் ரெட்டி என்பவர், ஸ்ராவணியுடன் பேசிய 'ஆடியோ' சமீபத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்து வேறுபாடு

அசோக் ரெட்டியிடம் விசாரணை நடத்த, போலீசார் முடிவு செய்தனர். அதற்குள், அவர் தலைமறைவு ஆனார். இது குறித்து, போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: ஸ்ராவணியும், சாய் கிருஷ்ணாவும் காதலித்துள்ளனர். பின், கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்துள்ளனர். பிறகு, தேவராஜ் ரெட்டி என்பவரை காதலித்துஉள்ளார். இந்நிலையில், அசோக் ரெட்டி தயாரித்த படத்தில், ஸ்ராவணி நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று பேருமே, அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஏமாற்றி உள்ளனர். இதனாலேயே மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.


விரைவில் கைது

இந்த விவகாரத்தில், காதலர்கள் மூன்று பேருக்கும் இடையே, மோதல் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகிறோம்.சாய் கிருஷ்ணா, அசோக் ரெட்டி ஆகியோரால், உடல்ரீதியாக துன்புறுத்தப் பட்டதாக, ஸ்ராவணி பேசிய ஆடியோ பதிவை கைப்பற்றி உள்ளோம். அசோக் ரெட்டியை தேடி வருகிறோம். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X