ஒரே தொகுதி... 11 தேர்தல்கள்... உம்மன் சாண்டி பொன் விழா| Dinamalar

ஒரே தொகுதி... 11 தேர்தல்கள்... உம்மன் சாண்டி பொன் விழா

Added : செப் 16, 2020
Share
 ஒரே தொகுதி... 11 தேர்தல்கள்...   உம்மன் சாண்டி பொன் விழா

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, சட்டசபை உறுப்பினராக தொடர்ந்து, 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து, இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளியில் இருந்து, 1970ல் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட உம்மன் சாண்டி, பின்னர் தோல்வியை சந்தித்ததே இல்லை. கட்சித்தலைவர்கள் இந்திராவும், ராகுலும் தேர்தல் அரசியலில் தோற்று போன போதும், காங்கிரஸ் கட்சியில், 50 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல், ஒரே தொகுதியில் இருந்து, தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர் இவர் ஒருவரே.


அரசியல் பயணம்

மாணவர் காங்கிரசில் இருந்து துவங்கியது, உம்மன் சாண்டியின் அரசியல் வாழ்க்கை. கட்சி தாவல்கள் கொடிகட்டி பறந்த கேரள அரசியலில், காங்கிரசே கதி என வாழ்பவர் அவர். கடந்த, 50 ஆண்டுகால சட்டசபை வாசத்தில, நான்கு முறை மாநில அமைச்சராக, 2006 - 2011ல் ஒரு முறை எதிர்க்கட்சித்தலைவராக, 2004 - 2006 மற்றும் 2011 - 2016ல் இரண்டு முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.

தேசிய அரசியலில் விருப்பம் இல்லாத இவருக்கு, அண்மையில் ஆந்திர மாநில மேலிட பார்வையாளர் பொறுப்பை தந்திருக்கிறது, காங்கிரஸ் தலைமை.ஆங்கிலத்தில் உம்மன் சாண்டியின் சுருக்க எழுத்துக்களை கொண்டு, ஓ.சி., என கேரள மக்களாலும், குஞ்சுஞ்சு என செல்லப் பெயரிட்டு அவரது சொந்த தொகுதி மக்களாலும் அன்பாக அழைக்கப்படும் உம்மன் சாண்டி, அரசியல் உலகம் கண்டிராத அபூர்வ மனிதர்.

எளிமையின் மறு உருவம். சொந்தமாக அலைபேசி வைத்திருக்க மாட்டார். கட்சிக் கூட்டங்களுக்கு செல்லும் போது, கட்சிக்காரர் அலைபேசியை இரவல் கேட்டு பேசுவார். முதல்வராக இருந்த போதும் சரி, இப்போது சாதாரண எம்.எல்.ஏ.,வாக இருக்கும் போதும் சரி, திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் அவரை எப்போதும், யாரும் சந்தித்து பேசலாம். லேண்ட் லைன் தொலைபேசி வைத்து இருக்கிறார். அவரே பதிலளிப்பார்.எளிமையானவர்

முதல்வராக இருந்த போது, அவர் செல்லும் இடத்திற்கு வாகன அணிவகுப்பு எல்லாம் இருக்காது. ஒரே ஒரு கார். அது, எல்லா, 'டிராபிக் சிக்னல்களில்' நின்று செல்லும். இப்போது எம்.எல்.ஏ., ஆக இருக்கும் போதும், கோட்டயத்தில் இரவில் ரயில் ஏறி, சிலீப்பர் கோச்சில் படுத்துறங்கி, காலையில் திருவனந்தபுரத்தில் இறங்கி, தனி ஆளாய் செல்வார். புதுப்பள்ளி தொகுதியில், இவருக்கு தெரியாத குடும்பங்கள் இல்லை. யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும், அங்கு சத்தமில்லாமல் வந்திருப்பார் சாண்டி.

ஊரில் இருக்கும் நாட்களில், சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனைக்கு செல்லும் போது, முதல்வராக இருந்த நேரத்திலும், பக்தர்கள் வரிசையில் பத்தோடு பதினொன்றாய் நின்றிருப்பார், அத்தனை எளிமை. முதல்வராக இருந்த போது, 15 லட்சம் மனுக்களை பொதுமக்களிடம் நேரடியாக வாங்கி, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் என்ற பெருமை உண்டு. இப்போது, 76 வயதிலும், கேரளாவில் பினராய் அரசிற்கு, 'சிம்ம சொப்பனமாய்' இருக்கிறார்.

பல மாநிலங்களில், பலமற்ற எதிர்க்கட்சியாக, காங்கிரசின் வேகம் குறைந்த போதிலும், கேரளாவில், கம்யூனிஸ்ட் கூட்டணி அரசிற்கு பெரும் சவாலாக, காங்கிரஸ் நீடிக்கிறது என்றால், அதற்கு உம்மன் சாண்டியும் ஒரு காரணம்.தமிழகத்தை போலவே, எட்டு மாதங்களில் தேர்தலை சந்திக்க போகும் கேரளாவின் அரசியல்களம், சட்டசபை வாழ்வில் பொன்விழா காணும் உம்மன் சாண்டியை மையப்படுத்தியே இன்னும் இயங்குகிறது. இதுவே, கேரள மக்கள், அவர் மீது கொண்டிருக்கும் அன்பின் அடையாளம்.


அரசியலே மாறி விட்டது உம்மன் சாண்டி வருத்தம்சட்டசபை உறுப்பினராக பொன்விழா காண்பது பற்றி உம்மன் சாண்டி நமது நிருபரிடம் கூறியதாவது:கேரள மக்கள், குறிப்பாக என் தொகுதி மக்கள், இத்தனை காலம் என் மீது காட்டிய அன்பிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் தகுதிக்கு மேலாக, நான் விரும்பியதை விட அதிகமாக, எனக்கு பதவிகளை, மக்கள் தந்துள்ளனர். அந்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.

நான் புதுப்பள்ளியில் இருந்து, 1970ல் வெற்றி பெற்று வந்த, இந்த, 50 ஆண்டுகளில், அரசியலில் நிறைய மாற்றங்கள். அன்று, மக்களின் நன்மைக்கான அரசியல் இருந்தது; இன்று, எல்லாமே மாறிவிட்டது. ஜனநாயகத்தில், மக்களின் நம்பிக்கையை பெறுவது தான் முக்கியம். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தான், பொது வாழ்விற்கு வந்திருக்கிறோம்.வரும் தேர்தலில் முதல்வர் ஆக வேண்டும் என்றெல்லாம் விரும்பி, நான் செயல்படவில்லை. கட்சி என்ன கட்டளையிடுகிறதோ, அதை செவ்வனே செய்வேன்.இவ்வாறு, கூறினார்.


ஒரே தொகுதியில் 11 முறைகாங்கிரசில் இது வரலாறு*தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி தான், இந்தியாவிலேயே அதிக காலம் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். அவர், 13 தேர்தல்களில், ஏழு தொகுதிகளில் இருந்து தேர்வானவர். 1984ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை.

* கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் கே.எம். மாணி, 54 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். 13 தேர்தல்களில்,ஒரே தொகுதியில் இருந்து வென்றவர்.

* உம்மன் சாண்டி, 11 முறை ஒரே தொகுதியில் இருந்து, தொடர்ச்சியாக வென்று, 50 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கிறார். காங்கிரஸ் வரலாற்றிலேயே, ஒரே தொகுதியில் இருந்து, 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருப்பது உம்மன் சாண்டி மட்டுமே.

- நமது சிறப்பு நிருபர்- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X