பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை இரண்டாக பிரிப்பு புதிதாக ஆராய்ச்சி பல்கலை அமைப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை:ஆராய்ச்சிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலை, இரண்டு பல்கலைகளாக பிரிக்கப்பட்டு, புதிதாக அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலை துவக்கப்படுகிறது.

தமிழக சட்டசபையில், இதுதொடர்பான, இரண்டு சட்ட திருத்த மசோதாக்களை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


இணைப்பு



மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:கடந்த, 1978ம் ஆண்டு நிறுவப்பட்ட, அண்ணா பல்கலை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலையானது, 13 உறுப்பு கல்லுாரிகள், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் இணைப்பு கல்லுாரிகளுடன் செயல்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள இணைப்பு கல்லுாரி களை, சென்னையில் இருந்து நிர்வகிப்பது பல்கலையின் அதிக நேரத்தையும், ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது.எனவே, இணைப்பு கல்லுாரிகளை ஒன்றாக நிர்வகிக்கும் வகையில், அண்ணா பல்கலை என்றும், தற்போதுள்ள பல்கலையை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை என்றும் மாற்றியமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.

கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு பள்ளி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை, இந்த பல்கலையில் அடங்கும். அந்த கல்லுாரி பேராசிரியர்களில் ஒருவர், ஆட்சி மன்ற குழுவில் இடம் பெறுவார்.

இன்ஜினியரிங், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் முன்னேற்ற வழிகளை காணும் வகையில், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை உருவாக்கப்படுகிறது.புதிதாக அமைய உள்ள அண்ணா பல்கலையானது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளின் இணைப்புகளை கொண்டதாக இருக்கும்.

அண்ணாமலை பல்கலை உள்ள அண்ணாமலை நகரில் உள்ள கல்லுாரிகளுக்கு மட்டும், இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.இதன் தலைமையகமானது, சென்னை பெருநகர எல்லை அல்லது அதை சுற்றி, 50 கி.மீ., சுற்றளவில் அமையும். இணைப்பு கல்லுாரிகளின் படிப்புகளுக்கு பட்டங்கள், டிப்ளமா வழங்குவது, கவுரவ பட்டங்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.


அமைச்சருக்கு பதவி

இந்த பல்கலைக்கு வேந்தர், இணைவேந்தர், துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரை கொண்ட நிர்வாக முறை இருக்கும். தொழில்நுட்ப கல்வி துறையின் அமைச்சர், இணை வேந்தராக இருப்பார்.அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி பல்கலை மற்றும் அண்ணா பல்கலை ஆகிய இரண்டிலும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இந்திய மேலாண்மை நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி., - திருச்சி என்.ஐ.டி., ஆகியவற்றில் இருந்து, ஒரு பிரதிநிதி, கல்வி குழுவில் இடம் பெறுவார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X