அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் புதிய பல்கலை முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

Added : செப் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:''திருவள்ளுவர் பல்கலையை, இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக வைத்து, புதிய பல்கலை உருவாக்கப்படும். இப்பல்கலை நடப்பாண்டிலேயே செயல்பட துவங்கும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, பல உயர் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து உருவாக்கியும், பல உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை, மேம்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில், ஏழை மாணவர்களின் உயர் கல்விக் கனவு நனவானது. அகில இந்திய அளவில், 26.3 சதவீதம் என இருக்கும், மாணவர் சேர்க்கை விகிதம், தமிழகத்தில், 49 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

சட்டத் துறை அமைச்சர் கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பல்கலையை, இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக வைத்து, ஒரு புதிய பல்கலை உருவாக்கப்படும். இப்பல்கலை, நடப்பாண்டிலேயே, செயல்படத் துவங்கும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார். இதற்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: வேலுார் மாவட்டத்தில், கருணாநிதியால், திருவள்ளுவர் பல்கலை துவக்கப்பட்டது. அங்கு, முழுமையாகப் பணிகள் நிறைவேறவில்லை. பல புதிய திட்டங்களை துவக்க வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை. இந்நிலையில், அதை இரண்டாக பிரிப்பது அநியாயம். விழுப்புரத்தில் புதிதாக துவக்குங்கள். திருவள்ளுவர் பல்கலை, என் தொகுதியில் உள்ளது.

முதல்வர்: நீங்கள் ஆதங்கப்பட வேண்டியதில்லை. கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக தான், இந்த பல்கலை பிரிக்கப்படுகிறது. பல்கலையை பிரித்தால் தான், நிர்வாக வசதி சிறப்பாக இருக்கும். மாணவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இது தான் காரணம்; காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை.

துரைமுருகன்: விழுப்புரத்தில், புதிய பல்கலை துவக்குங்கள். உங்கள் பெயரை கூட வைத்துக் கொள்ளுங்கள். இரண்டாக பிரித்தால், நிர்வாகம் எப்படி செயல்படும்?

முதல்வர்: ஒரு புதிய பல்கலை தான் உருவாக்கப்படும். ஏற்கனவே உள்ளதை பிரித்து கொடுக்கிறோம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் உள்ள, கல்லுாரிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து, புதிய பல்கலை உருவாக்குகிறோம்.பல்கலையை பிரிக்கவே விட மாட்டேன்கிறீர்கள்; பெயர் வைத்தால் விடவா போகிறீர்கள்?இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-202012:35:41 IST Report Abuse
Bhaskaran ஊழலுக்கு பெயர்போனது பெரியார் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X