சென்னை:தமிழக சட்டசபையில் நேற்று, 19 சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் எடுக்க, உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் அம்சத்தை நீக்கி, சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.சட்ட திருத்த மசோதாக்கள் விபரம்:
* கடந்த, 2009ம் ஆண்டு தமிழக திருமண பதிவு சட்டத்தின்படி, திருமணம் நடக்கும் பகுதி பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே, திருமணத்தை பதிவு செய்ய முடியும். இதற்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, மணமகன் அல்லது மணமகளின் தங்குமிடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்
* நீதிமன்ற கட்டணங்களை மின்னணு முறையில் செலுத்தும் வகையில், தமிழக நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு திருத்த சட்டம்; வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை, இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து, நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தவும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது
* விவசாயிகளின் விளை பொருட்களை, இடம், நேர கட்டுப்பாடு இல்லாமல் விற்கும் வகையில், முதலீடுகளை அதிகரிக்கவும், தனியார் சந்தைகள் அமைக்கவும், தமிழக வேளாண் விளை பொருள், சந்தைப்படுத்தும் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது
* சென்னை மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்டங்களின் ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர்களின் பதவிக்காலம், டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டு, சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது
* பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சபை, சங்க உறுப்பினர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டால், அந்த நிர்வாக சபையை உடனே கலைத்து, இடைக்கால செயல் அலுவலரை நியமிக்கும் வகையில், தமிழக கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
* சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து துறையின் அதிகார அமைப்பில், பதவி வழி தலைவராக முதல்வர்; துணை தலைவராக வீட்டு வசதி துறை அமைச்சர். உறுப்பினர்களாக போக்குவரத்து அமைச்சர், தலைமை செயலர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி., துணை தலைவர் ஆகியோர் செயல்படும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
* விரிவான வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் எடுக்கும் நடவடிக்கையில், நில உரிமையாளர் களிடம் கருத்து கேட்கும் அம்சம் நீக்கப்பட்டு, தமிழக நகர் ஊரமைப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
'மாஜி'க்களுக்கு இலவச ரூம்!
*தமிழக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் தங்குவதற்காக, சென்னையில் விடுதி செயல்படுகிறது. இதில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களில் பங்கேற்கும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும், எம்.எல்.சி.க்களுக்கு வாடகையின்றி விடுதி வழங்க, சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
* பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியில் மாற்றம் செய்வதற்கான சட்ட திருத்தம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதுவரையில், பெட்ரோலுக்கு, 34 சதவீத வரி விதிக்கப்பட்டதை மாற்றி, இனி, 15 சதவீதத்துடன் கூடுதலாக, 13.௦௨ ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும்
* டீசலுக்கு, 25 சதவீத வரி மாற்றப்பட்டு, 11 சதவீதமும், 9.62 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE