கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகராட்சி துப்புரவு ஊழியர்கள் பணி ஒப்பந்த உரிமையாளரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி நகராட்சியில் துப்புரவு ஊழியர்களாக 124 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். முறையாக பணி செய்வதில்லை எனக் காரணம் கூறி, இவர்களை பணி ஒப்பந்ததாரர் விக்னேஷ் நேற்று முன்தினம் மாலை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 6:00 மணிக்கு நகராட்சி அலுவலக வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டபின், நான்கு முனை சந்திப்பில் ஒன்றுகூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காலை 6:40 முதல் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார். தொடர்ந்து எங்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை. பணிச்சுமை அதிகமாக உள்ளது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு முனை சந்திப்பில் 7:30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார் தலையிட்டு, ஒப்பந்த உரிமையாளர் விக்னேஷ் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE