தமிழ்நாடு

கேள்விக்குறி: விழுப்புரம் நகருக்கு குடிநீர் விநியோகம்...சாத்தனூர் தண்ணீர் ஆற்காட்டோடு நின்றது

Added : செப் 17, 2020
Share
Advertisement
 கேள்விக்குறி:  விழுப்புரம் நகருக்கு குடிநீர் விநியோகம்...சாத்தனூர் தண்ணீர் ஆற்காட்டோடு நின்றது

விழுப்புரம் குடிநீர் தேவைக்காக மிகுந்த சிரமங்களுக்கிடையே கொண்டு வரப்பட்ட சாத்தனூர் அணை நீர் குறிப்பிட்ட இலக்கை சென்றடையாமல் பாதியில் நின்றதால் அதிகாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதனால் விழுப்புரத்திற்கான குடிநீர் விநியோகம் கேள்விக்குறியாக உள்ளது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் விவசாய தேவைக்கு மட்டும் அல்லாது குடிநீருக்கும் அத்தியாவசிய நீர் ஆதாரமாக இருப்பது தென்பெண்ணையாறு. தற்போது ஆற்றில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால், கூட்டு குடிநீர் திட்டங்கள் முடங்கும் அபாயம் எழுந்தது.

குறிப்பாக விழுப்புரம் குடிநீர் வினியோகம் கேள்விக்குறியானது.இச்சூழலில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருக்கும் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன்படி கடந்த 9ம் தேதி முதல் ஆறு நாட்களுக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்றில் வரும் தண்ணீர் சேதமடையாமல் விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்டம் இயங்கும் எல்லீஸ் அணைக்கட்டை வேகமாக சென்றடையும் வகையில், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின் பேரில் இரவு பகலாக செயல்பட்டனர்.

கடும் வறட்சி நிலவிய இச்சூழலில் அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் நேற்று முன்தினம் அதிகாலை திருக்கோவிலூர் அணைக்கட்டை தண்ணீர் கடந்தது. இச்சூழலில் அன்றைய தினமே (15ம் தேதி) காலை 8:00 மணி அளவில் அணை மூடப்பட்டு விட்டது.நேற்று கீழக்கொண்டூர் அரசு மணல் குவாரி பள்ளங்களைக் கடந்து ஆற்காடுவரை தண்ணீர் சென்ற நிலையில், அணை மூடப்பட்டதால் நீரின் வேகம் குறைந்தது.கடும் வறட்சி காரணமாக அதிகாரிகளின் கணிப்பின்படி தண்ணீர் எல்லீஸ் அணைக்கட்டை சென்றடையாமல் போனதன் மூலம் விழுப்புரம் நகருக்கான குடிநீர் வினியோகம் கேள்விக் குறியாகியுள்ளது. வரும் பருவ மழையை நம்பியே விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்டம் இயங்கும் சூழலை இது ஏற்படுத்தியுள்ளது.என்றாலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வேட்டவலம், செஞ்சி உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் பருவமழை வரை தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய போதுமான அளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதே வேளையில் விழுப்புரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான முயற்சி வெற்றி பெறாதது அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது நிருபர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X