பிரதமர் மோடி, இன்று, 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு, இவரது வாழ்க்கையே உதாரணம். ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராக, சிறந்த நிர்வாகியாக, தேசத்தை பாதுகாக்கும் காவலனாக உச்சம் தொட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவர் இவரே. இதை கண்டுகொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். தன்னிகரில்லா தேசப்பற்றால், மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். இவரது நல்ல எண்ணமும், துணிச்சலான செயலும் வல்லரசு நாடாக இந்தியாவை உயர்த்தும்.

பெயர் : நரேந்திர மோடி
பிறந்த நாள் : 17.9.1950
பிறந்த இடம் : வாத் நகர், குஜராத்
தந்தை : தாமோதர்தாஸ் மோடி
தாயார் : ஹிராபென்
கல்வி : எம்.ஏ., அரசியல் அறிவியல் (குஜராத் பல்கலை. 1983, தொலைதுாரக் கல்வி)அமெரிக்காவில் மூன்று மாத, 'டிப்ளமா' (1993, 'பப்ளிக் ரிலேஷன்ஸ், இமேஜ் மேனேஜ்மென்ட்')
நாட்டுப்பற்று

தேசபக்தி கொண்டவர். தேர்தல் பிரசாரத்தில், 'தாய்நாட்டுக்கு ஓட்டளியுங்கள்' என கேட்டார். பேச்சுகளின் முடிவில் 'பாரத் மாதா கி ஜெ, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்' என முழக்கமிடுவார்.
வள்ளல் குணம்
வறுமை ஒழிப்பு, மருத்துவ உதவி, கொரோனா, 'பி.எம்., கேர்' நிதிக்கு, தன் சம்பளத்தில் இருந்து 22 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
கலகலப்பு
ஐ.பி.எஸ்., பயிற்சி முடித்த, தமிழகத்தைச் சேர்ந்த கிரண் ஸ்ருதியிடம் காணொலி மூலம் பேசிய மோடி, 'சீருடை பணியை ஏன் தேர்வு செய்தீர்கள்?' என கேட்டார். அதற்கு, 'கிரண் பேடியைப் போல வரவேண்டும் என்பதற்காக என் பெற்றோர் கிரண் ஸ்ருதி என பெயர் வைத்தனர்' என்றார். இதைக் கேட்டதும் மோடி சிரித்தார்.
பிறவி -துறவி

ராஜ்கோட்டில், 1966ல் ராமகிருஷ்ணா மடத்தின் ஆத்மஸ்தானந்தா சுவாமியை சந்தித்து, துறவியாக விரும்புவதாக கூறினார். அவரோ, மக்களுக்கு சேவையாற்றும்படி அறிவுறுத்தினார். இமயமலை பகுதியில் சுற்றி, புது அனுபவங்களை பெற்றார். இளம் பருவத்திலேயே பற்றுகளில் இருந்து விடுபட்டார்.
எப்போதும் சி.எம்.,

குஜராத் முதல்வராக பதவி ஏற்ற தருணத்தில், 'எப்போதும் சி.எம்., ஆக இருப்பேன்' என்றார். ஆங்கிலத்தில் சி.எம்., என்றால் காமன் மேன் - சாதாரண மனிதன் என்று பொருள்.
பிள்ளை மனம்

பள்ளி நாட்களில் சாரணர் இயக்க முகாமில் பங்கேற்றார். அப்போது மரத்தின் மீது ஏறி, பட்டத்தின் நுாலில் சிக்கிய பறவையை மீட்டார். பயிற்சி நேரத்தில் இப்படி நடந்து கொண்டதால் தண்டிக்கப்படுவார் என எதிர்பார்த்தனர். ஆனால், இவரை ஆசிரியர், சக மாணவர்கள் பாராட்டினர்.
'லஞ்சம் தவிர்'
குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற போது, 'லஞ்சம் வாங்காதே' என, அவரது தாய் ஆசி வழங்கினார். இதை தன் வாழ்விலும், அரசு நிர்வாகத்திலும் கடைப்பிடிக்கிறார்.
'ஸ்டிரிக்ட்' நிர்வாகி
வேலை விஷயத்தில் கண்டிப்பானவர். ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார். பணி நேரத்தில் அலைபேசி பயன்படுத்துவது பிடிக்காது. தவறு செய்தால், அன்பாக பேசி புரிய வைப்பார். அவரது கட்டுப்பாட்டை மீறி ஏதாவது நடந்தால், அதை ஒரு சிறிய காகித துண்டில் எழுதி கிழித்து விடுவார்.
முதல் முறை

இந்திய சுதந்திரத்துக்கு பின் பிறந்து, பிரதமரான முதல் தலைவர்.ஜனாதிபதி மாளிகை முன், திறந்தவெளி அரங்கில் பதவியேற்ற முதல் பிரதமர். அயோத்தி ராம் ஜென்ம பூமிக்கு சென்ற முதல் பிரதமர்.நீண்டநாள் பதவி வகிக்கும் காங்., அல்லாத பிரதமர்.
நாடக நடிகர்
தான் படித்த பள்ளிக்கு போதுமான வசதி இல்லாததால், நண்பர்களுடன் நாடகம் நடத்தினார். அதில் கிடைத்த தொகையை பள்ளி சுற்றுப்புறச் சுவர் கட்ட வழங்கினார்.
மகத்தான திட்டங்கள்
கங்கை ஆற்றை சுத்தப்படுத்துதல், துாய்மை இந்தியா, திட்டக்கமிஷன் கலைப்பு, அனைவருக்கும் வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, கிராமங்களை தத்தெடுத்தல், சமூக நல திட்டங்களுக்கு ஆதார் பயன்பாடு, சமையல் எரிவாயு மானியத்தை ஒழுங்குபடுத்தியது, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, ஜி.எஸ்.டி., வரி அமல், பண மதிப்பிழப்பு, முத்தலாக் தடை மசோதா, காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து உட்பட, பல வரலாற்று திட்டங்களை நிறைவேற்றினார்.
கவிதை... பறவை... பூஜை

* குஜராத்தியில் கவிதை எழுதுவார்.
* ஹிந்தியில் கையெழுத்திடுவார்.
* தினமும் யோகாவுடன் காலை பொழுதை துவங்குவார்.
* குஜராத் வெள்ள நிவாரண பணியில், 17 வயதில் ஈடுபட்டார்.
* அறுபது நாடுகளுக்கு சென்று உள்ளார். 14 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை பெற்றுத் தந்துள்ளார்.
*'கூகுளில்' எதையும் தேடி அறிந்து கொள்ள முடிவதால், மோடியின் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டதாம்.
* நவராத்திரி பூஜையின் ஒன்பது நாளும் விரதம் இருப்பார்.
* தனிமை விரும்பி. மயில், புறாக்களுடன் பொழுதை கழிப்பார்.
* தினமும் ஐந்து மணி நேரம் துாங்குவார்.
* டிஸ்கவரி, 'டிவி' சேனலை சேர்ந்த, பியர் கிரில்ஸ் உடன், வனத்தில் சாகச பயணம் செய்தார்.

ராணுவ தீபாவளி

சிறுவயதில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற இவரது ஆசை நிறைவேறவில்லை. 1965ல் இந்தியா - பாக்., போரின் போது, ராணுவ வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் தன், 15 வயதில் டீ கொடுத்து உதவினார். பிரதமரான பின், தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
எளிமை...பெருமை உடன்பிறந்தவர்களின் எளிய வாழ்க்கை
*சோம்பாய், அண்ணன் - வாத்நகரில் முதியோர் இல்லம் நடத்துகிறார்.
* அம்ருத்பாய், அண்ணன் - தனியார் நிறுவன பிட்டராக பணியாற்றி ஓய்வு.
*பிரகலத்பாய், தம்பி - மளிகைகடை நடத்துகிறார்
* வசந்திபென், தங்கை - இவரது கணவர் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி., ஊழியர்.
*பங்கஜ்பாய், தம்பி - குஜராத் தகவல் துறையில் பணி. தாய் ஹிராபென் இவருடன் வசிக்கிறார்.
உழைப்பு... உயர்வு
குஜராத் முதல்வராக இருந்த போதும், பிரதமராக இருக்கும் போதும் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காதவர். பொதுவாக பிரதமராக இருந்தவர்கள், மதியம் அல்லது மாலை அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவர். காலை முதல், நள்ளிரவு வரை பணியாற்றுவார் மோடி.
கோபம் வருமா
எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்ப்பார். பியூன் முதல், முதன்மை செயலர் வரை யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை.
முதலை 'கடி'
சிறுவனாக இருக்கும் போது, முதலை குட்டி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்தார் மோடி. தாய் கண்டிக்க, அதை மீண்டும் குளத்துக்குள் விட்டார். பள்ளி பருவத்தில் ஷர்மிஸ்தா ஏரியில் குளிக்கும் போது, முதலையின் வால் தாக்கியதில் கால் விரலில் காயம் ஏற்பட்டு தப்பினார்.
'பளபள' ஷூ
இளம் பருவத்தில், 'ஷூ' பாலிஷ் வாங்க வசதியில்லை. ஆசிரியர்கள் எழுதிய பின் துாக்கி எறியும், 'சாக் பீஸ்' துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்து, 'பாலிஷ்' ஆக பயன்படுத்துவார்.
'அயர்ன்' ரகசியம்
உடை விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துவார் மோடி. பள்ளி சீருடையை மடித்து, தலையணைக்கு அடியில் வைத்து படுப்பார். காலையில் வெண்கல பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி, 'அயர்ன்' செய்து சுருக்கம் இல்லாமல் அணிவார்.
மாம்பழமாம்... மாம்பழம்
மாம்பழம் விரும்பி சாப்பிடுவார். பழுக்க வைத்ததைவிட, மரத்தில் உள்ள மாம்பழங்களை சாப்பிட அதிகம் பிடிக்கும்.
'மவுஸ்' நாடு
தைவானுக்கு சென்ற போது, 'பாம்பாட்டி, மந்திரவாதிகளின் தேசமா இந்தியா' என பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு, 'மவுஸ்' இந்தியா என்றார். கம்ப்யூட்டர் துறையில் வளர்ச்சி பெற்ற நாடு என்ற அர்த்தத்தில், இதை குறிப்பிட்டார்.
படேலுக்கு கவுரவம்

இந்தியாவை ஒருங்கிணைத்த, 'இரும்பு மனிதர்' சர்தார் படேலுக்கு, உலகின் மிக உயரமான 597 அடி சிலையை, குஜராத்தில் அமைத்தார். விவேகானந்தரின் கொள்கைகளையும் மோடி பின்பற்றுகிறார்.
'டிஜிட்டல்' பிரியர்
'டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார். 'டுவிட்டரில்' அதிகம் பேர் பின்பற்றும் உலகத் தலைவர் பட்டியலில், மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சாதனைப்பயணம்...

* 1972, அக். 3: ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.
* 1974, ஜூன் 3: குஜராத்தில், ஊழலுக்கு எதிரான, இளைஞர் நவ்னிர்மன் இயக்கத்தில் சேர்ந்தார்.
* 1975, ஜூன்3: 'எமர்ஜென்சிக்கு' எதிரான போராட்டத்தில், சீக்கியர் போல வேடம் அணிந்து, போலீஸ் பார்வையில் இருந்து தப்பினார்.
* 1985: பா.ஜ.,வில் சேர்ந்தார்.
* 1987, பிப். 3: குஜராத் பிரிவின் பா.ஜ., அமைப்பு செயலரானார்.
* 1989, ஜூன் 3: அத்வானியின் மக்கள் சக்தி யாத்திரையில் பங்கேற்றார்.
* 1995, அக். 3: பா.ஜ., தேசிய செயலரானார்.
* 1998, ஜன. 5: பா.ஜ., தேசிய பொதுச் செயலரானார்.
* 2001, அக். 7: குஜராத் முதல்வராக பதவியேற்றார்.
* 2002, டிச. 1: இரண்டாவது முறையாக குஜராத் முதல்வர்.
* 2007, ஜூன் 1: குஜராத்தின் நீண்ட நாள் முதல்வர். -2,063 நாட்கள்.
* 2007, டிச. 23: குஜராத் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார்.
* 2012, டிச. 26: நான்காவது முறையாக குஜராத் முதல்வர்.
* 2013, ஜூன் 9: லோக்சபா தேர்தலுக்கான (2014) பா.ஜ., குழு தலைவர்.
* 2013, செப். 13: பிரதமர் வேட்பாளராக தேர்வானார்.
* 2014, மே 26: பிரதமராக பதவி ஏற்றார்.
* 2014, ஜூன் 15: பூட்டானுக்கு முதல் வெளிநாட்டு பயணம் சென்றார்.
* 2014, ஜூலை 14: பிரேசிலில் 6வது 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்றார்.
* 2014, ஆக. 28: அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் துவக்கினார்.
* 2014, அக். 2: துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.
* 2014, டிச. 8: 'டைம்' பத்திரிகையின் ஆண்டின் சிறந்த நபராக தேர்வானார்.
* 2015, டிச. 25: பாகிஸ்தானுக்கு 12 ஆண்டுகளுக்கு பின் சென்ற இந்திய பிரதமர்.
* 2016, ஜூன் 8: அமெரிக்க காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
* 2016, நவ. 8: பணமதிப்பிழப்பு அறிவித்தார்.
* 2017, ஜூன் 26: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
* 2017, ஜூலை 4: இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர்.
* 2019, பிப். 22: தென் கொரியாவின் சியோல் அமைதி பரிசு பெற்றார்.
* 2019, மே 30: பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
* 2019, செப். 25: 'துாய்மை இந்தியா' திட்டத்திற்காக 'கோல்கீப்பர்ஸ் குளோபல் கோல்ஸ்' விருது பெற்றார்.
* 2019, அக்., 11: மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கை சந்தித்தார்.
* 2019, நவ. 14: பிரேசிலில் நடந்த 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்றார்.
* 2020, பிப். 24: ஆமதாபாதில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பங்கேற்றார்.
* 2020, மார்ச் 24: 'கொரோனா' ஊரடங்கு அறிவித்தார்.
* 2020, ஜூலை 3: லடாக்கில் ராணுவ வீரர்களிடம் உரையாற்றினார்.
* 2020, ஆக. 5: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.