தமிழ்நாடு

பெங்களூருவில் சிக்கிய கொலம்பியா நாட்டு கொள்ளை கும்பல்: ஜாமினில் வெளிவந்து தமிழக தென் மாவட்டங்களில் தலைமறைவு

Added : செப் 17, 2020
Share
Advertisement

நகை கடை அதிபரின் வீடு, வங்கிகள் உள்பட, தமிழகத்தில், 21 இடங்களில் கொள்ளை அடித்த கும்பல், பெங்களூருவில் சிக்கியது. அவர்கள் ஜாமினில் வெளியில் சென்றவர்கள் தலைமைறைவாக உள்ளனர். அவர்களை தேடி பிடிக்க, டி.ஜி.பி., தலையிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


சேலம், குரங்குச்சாவடியை சேர்ந்த, ஸ்ரீராம் மகன் ஸ்ரீபாசியம், 37; நகை கடை உரிமையாளர். இவரது வீட்டில், 2019 டிச., 13ல், 2.25 கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி கட்டி, 57 கேரட் வைரம், எட்டு லட்சம் ரூபாய், 400 அமெரிக்க டாலர் ஆகியவை கொள்ளை போனது. இதுதொடர்பாக, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில் அடங்கிய தனிப்படையினர் விசாரித்ததில், கொள்ளையில் ஈடுபட்டது, கொலம்பியா நாட்டு கும்பல் என தெரிந்தது. இந்நிலையில், கடந்த மாதம், பெங்களூருவில் ஒரு நகை கடையில் கொள்ளையடிக்க முயன்ற, அந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கொலம்பியா, சூர்புகாடாவை சேர்ந்த, வில்லியம் பட்டில்லா மார்டின்ஸ், 48, புளோரேஸ்ட் புகாலாவை சேர்ந்த, கிறிஸ்டியன் யேனிஸ் நவரோ ஒலர்டே, 34, ரோட்ரிகோ முனோசா மகள் சேபனியா முனோசா மோன்சால்வ், 23, என தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில், கொலம்பியாவை சேர்ந்த, ஜாராமில்லோ கிரால்டோ, 48, தலைமையில், 12 பேர் இந்தியா வந்து, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் முகாமிட்டு, நகை கடை, வங்கிகளில், கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். தமிழகத்தில், சேலம் நகை கடை அதிபரின் வீடு, மூன்று வங்கிகள் உள்பட, 21 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதை, பெங்களூரு போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால், பெங்களூரு போலீசார், பெங்களூருவில் நடந்த, 32 கொள்ளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நகைகளை மீட்டு கொடுத்த போலீசார், மூன்று பேர் மீது, நான்கு புகாரில் வழக்குப்பதிந்து, பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் பிணைய தொகையை செலுத்திவிட்டு, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மாதம் இரு நாள், பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. ஆனால், அவர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக நீதிமன்றம் வரவில்லை; தலைமறைவாகிவிட்டனர். அதேநேரம், பெங்களூரு வழக்குகளில், நகைகள் மீட்கப்பட்டதால், அம்மாநில போலீசார், மேற்கொண்டு கண்டுகொள்ளவில்லை. தற்போது ஊரடங்கால் விமான, கப்பல் சேவை இல்லாததால், கொலம்பியா கொள்ளையர்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள், வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் முன், டி.ஜி.பி., தலையிட்டு, சிறப்பு தனிப்படை அமைத்து, கொலம்பியா கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும். அத்துடன், ஏற்கனவே கொள்ளையடித்த நகைகளை, அவர்களிடம் இருந்து மீட்டுத்தர, பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து, இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது: சேலம் ஏ.என்.எஸ்., மட்டுமின்றி, தமிழகம் முழுதும், பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர், பெங்களூருவில் சிக்கிய நிலையில், அந்த மாநில போலீசார், அங்கு கொள்ளை போன சம்பவங்களுக்கு மட்டும், நகை பறிமுதலை மேற்கொண்டனர். அந்த கும்பல், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழக டி.ஜி.பி., உடனே, ஐ.ஜி., அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில், தனிப்படை அமைக்க வேண்டும். தேவைப்படின், பெங்களூரு, மும்பை, சட்டீஸ்கர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசாருடன் அதிகாரிகள் சென்று விசாரித்து, கொள்ளை கும்பலை கைது செய்ய வேண்டும். டி.ஜி.பி., தலையிடாவிட்டால், கொலம்பியா கும்பலால், தமிழகத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட, 10 கிலோவுக்கும் மேலான தங்க நகைகளை மீட்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X