புதுடில்லி : லடாக்கின் கிழக்கு பகுதியில் எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்து செல்வதை, எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது என ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சீன விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜ்யசபாவில் அளித்த விளக்கம்: எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என இந்தியாவும், சீனாவும் விரும்புகின்றன. எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தியா சீன எல்லையில், அருணாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ., பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியாவின் எல்லையை பாதுகாக்கும் பணியில், கடந்த ஜூன் 15ம் தேதி கல்வன் பகுதியில் நடந்த மோதலில் ராணுவ அதிகாரி சந்தோஷ்பாபு உள்ளிட்ட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சீனாவின் செயல், இருநாட்டு ஒப்பந்தங்களை அந்நாடு மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. சீன ராணுவத்தன் நடவடிக்கை 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களுக்கு எதிரானது. எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதற்காக எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை மதிக்க வேண்டும். இந்த ஒப்பந்தங்களை நமது ராணுவம் உறுதியாக மதிக்கிறது. ஆனால், சீன தரப்பு அதனை பின்பற்றவில்லை. எல்லை பகுதியில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டதுடன், ராணுவத்தை குவித்து வருகிறது. நமது பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசு பட்ஜெட்டில் இரு மடங்கு நிதி ஒதுக்கியது.

எல்லை பகுதியில், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, பிரச்னைக்குரிய பகுதிகள், முன்பு இருந்த சூழ்நிலையை விட தற்போது மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையை அமைதியாக தீர்க்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த சவாலையும் சந்திக்க, தயாராக உள்ளோம். நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் காங்கிரசின் ஏ.கே. அந்தோணி எழுப்பிய கேள்விக்கு ராஜ்நாத் அளித்த பதிலில், சீனாவுடனான மோதலுக்கு, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில்(எல்ஏசி) இந்திய வீரர்களை தடுத்ததே காரணம். சர்ச்சை நடந்த இடமான லடாக்கின் கிழக்கு பகுதியில் ரோந்து பணியில் எந்த மாற்றமும் இருக்காது. ரோந்து முறை நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை ரோந்து செல்வதை எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது எனக்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE