சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,ஆயத்தம்! | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,ஆயத்தம்!

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (21)
Share
சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, அ.தி.மு.க., தயாராகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், இன்று சென்னையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில், ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் பங்கேற்க, அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு, அவசர அழைப்பு விடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், சசிகலா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக
ஆயத்தம்!

சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, அ.தி.மு.க., தயாராகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், இன்று சென்னையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில், ஆலோசனை நடத்த உள்ளனர்.

அதில் பங்கேற்க, அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு, அவசர அழைப்பு விடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், சசிகலா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளதால், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவங்க உள்ளது. தேர்தல் வியூகம் வகுத்து தர, அரசியல் நிபுணர் சுனில் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆளும் கட்சியில் புயல்கடந்த லோக்சபா தேர்தலில், இக்குழுவினர் அளித்த வியூகம் தான், தி.மு.க.,வுக்கு வெற்றியை தேடித் தந்தது. தேர்தல் பிரசாரத்தில், சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி, ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. புதிய பொறுப்பாளர்கள், மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட வாரியாகவும், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று உள்ளனர். கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மாற்றப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை, மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. இதேபோல, மற்ற அணிகளிலும், நிர்வாகிகள் மாற்றம் நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டம் என, பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
சில மாவட்டங்களில், அமைச்சர்கள் மற்றும் பழைய மாவட்டச் செயலர்கள் எதிர்ப்பு காரணமாக, பிரிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், அடுத்த தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம், திடீரென ஆளும் கட்சியில் புயலைக் கிளப்பியது. இதில், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை முன்னிறுத்த, அமைச்சர்கள் சிலர்

விரும்புகின்றனர். அது தொடர்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சமரசம் பேசியுள்ளனர். அவர், 'தேர்தலுக்கு பின் முடிவு செய்யலாம்' என, கை விரித்து விட்டார்.இந்தச் சூழ்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை, 4:30 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

அவசர அழைப்பு

கூட்டத்தில் பங்கேற்க, அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ள அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.இன்றைய கூட்டத்தில், கட்சி தேர்தல் நடத்துவது, மாவட்டங்களைப் பிரிப்பது, சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், முதல்வர் வேட்பாளர் மற்றும் சசிகலா சேர்ப்பு குறித்து, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., திடீர் நெருக்கடி

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசை தவிர்த்து, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பிற கட்சிகளை, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட வைக்க, நெருக்கடி அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளில், காங்கிரசின், 'கை' சின்னத்தை தவிர, மற்ற கட்சிகளின் சின்னம், மக்களிடம் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இதனால், தி.மு.க., கூட்டணி கட்சிகள், அவர்களின் சின்னத்தில் போட்டியிட்டால், அது, அ.தி.மு.க., வெற்றிக்கு வழி வகுக்கும் என, தி.மு.க., தலைமை கருதுகிறது.
எனவே, காங்கிரசை தவிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு, சட்டசபை தேர்தலில், ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

மேலும், அக்கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும், தி.மு.க., தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. காங்கிரசுக்கு மட்டும், 'கை' சின்னத்தில் போட்டியிட வசதியாக, இரட்டை இலக்கத்தில், அதுவும் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.இந்நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விரும்பவில்லை. இவ்விஷயத்தில், அக்கட்சிகளின் டில்லி தலைமை தான் முடிவெடுக்கும் என, கூறப்படுகிறது.
இது குறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக தேர்தலில், இளைஞர்கள் ஓட்டுக்கள் தான் கணிசமாக பதிவாகும். எனவே, இளைஞர்களை கவரும் வகையில், ரஜினி கட்சியும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வும் அமைக்கும் வியூகத்தினால், தி.மு.க.,விற்கு பாதிப்பு ஏற்படும்.தேர்தலுக்கு பின், ஒருவேளை தொங்கு சட்டசபை உருவானால், தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., இழுத்து விடும் வாய்ப்பு அதிகம். அதை தவிர்க்கவே, அக்கட்சிகளை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க, தி.மு.க., விரும்புகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முன்வருமா என்பது, கேள்விக்குறியே. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் - -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X