''தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோவை ஆகிய மூன்று நகரங்களிலிருந்து, கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளுடன், சர்வதேச விமான சேவை விரைவில் துவக்கப்படும்,'' என, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
'தினமலர்' நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என, நம்புகிறேன்.
'வந்தே பாரத்'
சர்வதேச விமான சேவையை துவக்கிஉள்ள நாடுகள், விமானம் புறப்படும் இடத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றன.
மேலும், விமானப் பயணத்தில், கொரோனா தடுப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், எதிர்பார்க்கின்றன.கொரோனா பரவல் காலத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், கடந்த, 9ம் தேதி முதல், 15ம் தேதி வரை, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு, 33 சர்வதேச விமானங்கள் வந்தன. 32 சர்வதேச விமானங்கள் புறப்பட்டு சென்றன. அபுதாபி, பஹ்ரைன், தோகா, துபாய், கோலாலம்பூர், குவைத், லண்டன், மஸ்கட், ரியாத், இலங்கை ஆகிய பகுதிகளுக்கு, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும் கூடுதல் விமானங்களை இயக்க, தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்.சென்னையிலிருந்து, 'ஏர் - இந்தியா' நிறுவனம், துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு தலா ஒரு முறை விமானத்தை இயக்கின. 'இண்டிகோ' நிறுவனம், தோகா, குவைத்துக்கு தலா ஒன்று, துபாய்க்கு இரண்டு, இலங்கைக்கு ஆறு என, விமானங்களை இயக்கியது.
ஒப்புதல்
இத்துடன், 'எமிரேட்ஸ், ப்ளை துபாய், ஜசீரா, குவைத் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஓமன் ஏர்' ஆகிய நிறுவனங்கள், சென்னைக்கு இரு தடத்திலும் விமானங்களை இயக்கின. கொரோனா பரவலுக்கு முன், சென்னையிலிருந்து, வெளிநாடுகளைச் சேர்ந்த, 28 பகுதிகளுக்கு, வாரம், 359 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
தமிழகத்தில், சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும், கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளுடன் விரைவில், சர்வதேச விமான சேவை துவக்கப்படும். கொரோனா கட்டுக்குள் வந்தவுடன், இந்த நகரங்களிலிருந்து விமானங்களை இயக்க, வெளிநாடுகள் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலால், விமான சேவை கிடைக்காமல், தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளில் பரிதவித்த இந்தியர்களை, தாயகம் அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டத்தை அமல்படுத்த, பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். இதனால், பல நாடுகளிலிருந்து தமிழர்கள், தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE