சென்னை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு இல்லையென உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் செப்.,13ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் எழுந்த பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது. மேலும், பொது விசயங்களில் கருத்து கூறும் போது சூர்யா கவனமாக பேசவேண்டும் என்றும், நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE