சென்னை:''தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா பாதிப்பு, 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 120 படுக்கைகளுடன், சிறப்பு வார்டு துவங்கப்பட்டு உள்ளது.இந்த வார்டை ஆய்வு செய்த, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில், கொரோனா சிகிச்சைக்காக, 1.42 லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்புக்கு பின் ஏற்படும், உடல்நல குறைவு சோதனை மையத்தில், 3,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம் மூன்று வாரங்களுக்கு பின் தான் தெரிய வரும். தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு, 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.