தி.மு.க., பொதுச் செயலர்துரைமுருகன், தன் மகன்கதிர் ஆனந்துடன், மாகதேவமலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார். அப்போது, தமிழக அரசின் உச்ச பதவியில், துரைமுருகன் அமருவார் என, சாமியார் அருள்வாக்கு கூறியதாக தெரிகிறது.
துரைமுருகனுக்கு பெரிய மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து, சாமியார் அருள்வாக்கு கூறியுள்ளார்.இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியதால், தி.மு.க., வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, துரைமுருகன் ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:வேலுார் லோக்சபா தேர்தலில், கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என, விபூதி சாமியார் முன்கூட்டியே கணித்து கூறினார். அவர் கூறியது, அப்படியே நடந்தது.
அதேபோல, துரைமுருகனுக்கும், தமிழக அரசின் உச்ச பதவி கிடைக்கும் என, சாமியார் கூறியதால், அவரது வாக்கு பலிக்கும் என்ற, நம்பிக்கை உருவாகி உள்ளது.கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து, பொதுச் செயலர் வரை உயர்ந்து விட்டார், துரைமுருகன். ஆட்சி அதிகாரத்தில், ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று முறை அமைச்சர் பதவியும் வகித்துள்ளார்.
அவருக்கு கிடைக்காத பதவி என்றால், கட்சி தலைவர் பதவியும், முதல்வர், துணை முதல்வர் பதவியும் தான். கட்சி தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் ஸ்டாலின் உள்ளார். அப்படி என்றால், துரைமுருகனுக்கு, சாமியார் கூறிய உச்ச பதவி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்தால், துணை முதல்வர் பதவி அல்லது சபாநாயகர் பதவி கிடைக்கலாம் என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -