தேனி:''தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அ.தி.மு.க. ஆட்சியில் மரியாதை இல்லை,'' என, அக்கட்சி முதன்மை செயலாளர் கே.என். நேரு ஆதங்கப்பட்டார்.
தேனியில்மாவட்ட தி.மு.க., சார்பில் சட்டசபை தேர்தல் ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெ., முதல்வர்களாக இருந்த போது தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தாலும் அதற்கு தனி மரியாதை இருந்தது. தற்போது 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் உரிய மரியாதை இல்லை. மத்திய, மாநில அரசுகள் தி.மு.க. மீது குற்றம் சுமத்துவதை குறியாக உள்ளனர். தி.மு.க.,தொண்டர்களை நம்பி உள்ளது.
சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் தொண்டர்கள் பதவி பெறுவர். கட்சியில் 35 ஆண்டுகள் பணியாற்றியவர்களைஒதுக்கி விட்டுநேற்று வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்க கூடாது. 10 ஆண்டுகள் எந்தபலனும் எதிர்பாராமல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கலாம், என்றார்.
மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில விவசாய அணி செயலாளர் மூக்கையா, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன், எம்.எல். ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார், தேனி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர், ஒன்றியம் வாரியாக பிரச்னைகள் தொடர்பாக தனி அறையில் மனு பெற்றார்.