பொள்ளாச்சி: கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் முழுமையான முகவரி தராததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பு கொள்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, முழுமையான முகவரி கொடுத்தால் பயனாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.ஆதார் அடையாள அட்டையின் எண் மற்றும் முகவரி உள்ளிட்ட முழு விபரங்கள் பெற்றுக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முழு விபரம் பெறாமல் பரிசோதனை செய்வதால், தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியல் தினமும் வெளியிடப்படுகின்றன. அதில் உள்ள முகவரி மற்றும் மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, அவர்களை அடையாளம் கண்டறிந்து, மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டிய சூழல் உள்ளது.

பட்டியலில் முழுமையான முகவரி இல்லாமல், குறிப்பிட்ட கிராமங்களின் மட்டுமே உள்ளது. அந்த முகவரியை கண்டறிய மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் கோவை அல்லது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அதன் பின், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கின்றனர். ஒரு சில நேரங்களில், மொபைல்போன் எண்களும் தவறாக உள்ளதுடன்; தொடர்பு கொள்ளும் போது சம்பந்தப்பட்ட நபர்கள் அழைப்பை எடுக்காமல் இருப்பதாலும் முகவரியை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பட்டியலில் முழுமையான முகவரி இருந்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வர முடியும். ஆனால், முழுமையான முகவரி பெறாமல் பரிசோதனை செய்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன.ஆதார் அட்டையில் உள்ள முகவரி ஒன்றாகவும்; தற்போது அவர்கள் குடியிருப்பது வேறு பகுதியாகவும் உள்ளது. மொபைல்போன் எண், முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரியாக பதிவு செய்யாமல் பரிசோதனை செய்வதால், அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பரிசோதனை மேற்கொள்பவர்களிடம் ஆதார் அடையாள அட்டையில் உள்ள முகவரி மற்றும் தற்போதுள்ள முகவரி உள்ளிட்ட விபரங்களையும்; சரியான மொபைல்போன் எண்ணையும் பெற வேண்டும்.இதனால் வீண் அலைச்சலும் குழப்பமும் ஏற்படுவதை தவிர்த்து, சரியான நபரை காலதாமதமின்றி, உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வர முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.