இன்னும், எட்டு மாதங்களில், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதாவது, 2021 மே இறுதிக்குள், தேர்தலை, நடத்தியாக வேண்டும். மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும் தேர்தல் கமிஷன், தான் முன்னின்று நடத்தும் தேர்தல்களை, 'கடனே' என்று தான் நடத்தி முடிக்கிறதே ஒழிய, 'கடமை' உணர்வுகளோடு நடத்துவதே இல்லை.'குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு, நாட்டின் உயர்ந்த நீதிமன்றமான, உச்ச நீதிமன்றம், ஒரு முறை இருமுறை அல்ல, பலமுறை அறிவுறுத்தி உள்ளது.
பச்சைக்கொடி
ஆனால், தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்ற அறிவுரை மற்றும் ஆலோசனைகளை ஒதுக்கி, ஓரமாக வைத்து விட்டு, 'கடனே' என்று, தேர்தல்களை நடத்திக் கொண்டிருப்பதை பார்த்தால், அடுத்து வரும் தேர்தல்களை, உச்ச நீதிமன்றமே, நேரடியாக களத்தில் இறங்கி, நடத்த வேண்டியிருக்கும் போலும்.
இன்றைய நிலவரப்படி, பதவியில் உள்ள, எம்.பி.,க்களில், 174 பேர், அதாவது, 30 சதவீதம் பேர், குற்றப் பின்னணி கொண்டவர்கள். இந்த குற்றப் பின்னணி, எம்.பி.,க்களில், அதிக குற்றப் பின்னணி கொண்டவர்கள், ஆட்சியில் உள்ள, பாரதிய ஜனதா, எம்.பி.,க்கள் தான் என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது.அதுபோல, தமிழக, எம்.எல்.ஏ.,க்களில், 178 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். இவர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க, தேர்தல் கமிஷனுக்கு ஏதாவது சிறப்பு அதிகாரம் உள்ளதா என்றால், 'இல்லை' என்பது தான் பதில்.'குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டியது, அரசை நிர்வகிக்கும் பார்லிமென்ட் தானே தவிர, நாங்கள் அல்ல' என்று, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் தெரிவித்து விட்டது.தேர்தல் கமிஷனின் இந்த பதிலை அடுத்து, உச்ச நீதிமன்றம், 'குற்றப் பின்னணி கொண்டவர்கள், தாராளமாக தேர்தலில் போட்டியிடலாம்' என்று, பச்சைக்கொடி காட்டி விட்டது. குற்றப் பின்னணி கொண்டவர்கள், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற முடிவை, குற்றப் பின்னணி கொண்டவர்களே கூடியுள்ள பார்லிமென்டில் எப்படி எடுப்பர்... நல்ல வேளையாக, குற்றவாளிகளும் கூட தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லாமல் விட்டார்களே... அது வரையில் மகிழ்ச்சி.
தாங்களே தங்கள் தலையில் கை வைத்து எரிந்து, சாம்பலாக, அரசியல்வாதிகள், 'பத்மாசுரன்'களா என்ன...குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் பச்சைக் கொடி காட்ட, அதற்கு ஆதரவாக, அடியெடுத்து வைத்துள்ள தேர்தல் கமிஷன், சும்மா பெயரளவுக்கு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தலையிட முடியாது
அதன் படி, வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறைத்த விபரங்களை, அந்தந்த வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டுமாம். அந்த விளம்பரங்கள் செய்தித்தாள் மற்றும் தொலைக் காட்சிகளில் வர வேண்டுமாம். நடக்கிற காரியமா இது...இந்த விளம்பரங்களால், வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சில ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவாகுமே தவிர, வேலைக்கு ஆகாது.ஆனால், தேர்தல்கமிஷன் மனம் வைத்தால், பார்லிமென்ட் கூடி, 'குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது' என்று சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவே, குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்து விட முடியும். ஆனால், அதற்கு தேர்தல் கமிஷன் முன் வர வேண்டுமே!அரசு அலுவலகத்தில் பணியாற்றி, பணி மூப்படைந்த என் கணவர், பணி புரியும் காலத்தில், அடிக்கடி இந்த வார்த்தையைக் கூறுவார். 'அதிகாரிகள் என்பவர்கள், அலுவலர்களை தண்டிப்பதற்கு என்றே உரிமம் பெற்றவர்கள்' என்பார். அந்த அதிகாரத்தை, தேர்தல் கமிஷன், கையில் எடுத்துக் கொண்டால் போதும். சுத்தமாக, மொத்தமாக, ஒரு குற்றப் பின்னணி கொண்ட, எம்.பி., கூட, சட்டசபையிலோ, பார்லிமென்டிலோ நுழைந்து விடாமல் தடுக்க முடியும்.
அதற்கு, தேர்தல் கமிஷன் மனது வைக்க வேண்டுமே!அரசியல் கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும், அவர்கள் விரும்பும் சின்னங்களை ஒதுக்கித் தருவதும், நிராகரிப்பதும், தேர்தல் கமிஷனின் உரிமை. அந்த உரிமையில் அரசோ, நீதிமன்றமோ தலையிட முடியாது; நிர்ப்பந்திக்கவும் கூடாது.அரசியல் கட்சிகள் தேர்தலில் பெறும் ஓட்டுகளை வைத்து தான் அக்கட்சிகளுக்கு, நிரந்தரமான சின்னங்களை கமிஷன் ஒதுக்கீடு செய்கிறது. குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை அரசியல் கட்சிகள் பெறவில்லை என்றால், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த சின்னத்தை திரும்பப் பெறவும், தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது.சமீபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த, முறையே, அரிவாள் சுத்தி மற்றும் கதிர், அரிவாள் சின்னங்களை, தேர்தல் கமிஷன், திரும்பப் பெற்று விட்டது. இனி, அக்கட்சிகள், நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில், ஒரே சின்னத்தில் போட்டியிட முடியாது.
மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில், பெயர்களை தான் குலுக்கி போட்டு தேர்வு செய்தனரே தவிர, சின்னங்கள் கிடையாது. ஆரம்ப காலத்தில் வண்ண பெட்டிகளை வைத்து தேர்தலைநடத்தினர். அதன் பின், சின்னங்களைக் கொண்டு வந்தனர். வேட்பாளர்களின் தகுதியையும், திறமையையும் ஆராய்ந்து பார்த்து, ஓட்டளிப்போரை விட, சின்னங்களை பார்த்து ஓட்டளித்து வரும் போக்கு தான் நாட்டில் அதிகம்.அரசியல் கட்சிகள், சின்னங்களை பயன்படுத்தி, தேர்தல்களை எதிர் கொள்வதால், மக்களும், 'மதிமயங்கி' சின்னங்களை குறி வைத்து, ஓட்டளிக்கின்றனர்.
அம்பேல்
தவிர,70-80 சதவீத வாக்காளர்களுக்கு, தங்கள் தொகுதி, எம்.எல்.ஏ., அல்லது, எம்.பி., பெயர் கூட தெரியாது.காங்கிரஸ் என்றால், கை; பா.ஜ., என்றால் தாமரை; தி.மு.க., என்றால் உதயசூரியன்; அ.தி.மு.க., என்றால் இரட்டை இலை; பா.ம.க., என்றால் மாம்பழம் போன்ற சின்னங்களை பார்த்து ஓட்டளிப்பது தான் வழக்கமாக இருக்கிறது.
தவிர, வேட்பாளர்களின் தகுதியைப் பார்த்து ஓட்டளிக்கும் நிலைமை, இன்னும் வரவில்லை.அப்படி வருவதற்கு உண்டான முதல் படி தான் இந்த யோசனை.மக்களை மடையர்களாக வைத்திருக்கும் வரை தான், அரசியல் கட்சிகளின், 'யாவாரம்' செவ்வனே நடக்கும். மக்கள் கொஞ்சம், 'வெவரமாக' ஆகி விட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் யாவாரம், 'அம்பேல்' ஆகி விடும்.நாட்டில், சட்டசபை மற்றும் பார்லிமென்டிற்கு மட்டுமே தேர்தல் நடைபெறுவதில்லை.
கூட்டுறவு சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றிற்கு இயக்குனர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்க, தேர்தல்கள் நடைபெறுகின்றன.அந்த தேர்தல்களில், சின்னங்கள் பயன்படுத்தப் படுவதில்லை. வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் வரிசை எண்களை மட்டுமே விளம்பரப்படுத்தி, தேர்தல்கள் நடைபெறுகின்றன; நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சமீபத்தில், தேர்தல் கமிஷன், எப்படி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சின்னங்களுக்கு விடை கொடுத்ததோ, அதே போல, நாட்டில் உள்ள, காங்கிரஸ், பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., உட்பட அனைத்துக் கட்சிகளின் சின்னங்களுக்கும், விடை கொடுத்து ஒழித்துக் கட்டி விட வேண்டும்.இனி நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும், வேட்பாளரின் பெயரை வைத்து மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்க வேண்டும்.இந்த திட்டம் நடைமுறைக்கு வருமேயானால், சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக போட்டியிடுவோர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, தங்களைத் தாங்களே அறிமுகப் படுத்தி, ஓட்டு சேகரிப்பர்.
முற்றுப்புள்ளி
அப்படி சேகரித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும். வெறும் சின்னங்களை வைத்து ஓட்டுக் கேட்டு, ஓட்டுகளை பெற்று, வெற்றி பெற்ற பிறகு, தொகுதி பக்கமே தலை காட்டாமல் இருக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.அதிகப்படியான வேட்பாளர்களை, சுயேச்சைகளாகக் களம் இறக்கி, அரசியல் கட்சிகளும், சில சமூக அமைப்புக்களும், தேர்தல் கமிஷனுக்கு, சின்னங்கள் ஒதுக்குவதில் குடைச்சல் கொடுக்கும் சம்பவங்களும் முற்றிலும் ஒழிக்கப்படும். சின்னம் என்ற முறைக்கு, முடிவு கட்டினால் தவிர, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதை நிறுத்த முடியாது. குற்றப் பின்னனி கொண்டவர்கள், ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்து கோலோச்சுவதையும் தடுக்க முடியாது.பரீட்சார்த்த முயற்சியாக, எதிர்வரும், தமிழக சட்டசபை தேர்தலின் போது, இந்த முறையை அமல்படுத்தி, அதன் முடிவைப் பார்த்து, நாடு முழுதும் அனைத்து தேர்தல்களுக்கும், இந்த முறையை அமல் படுத்தலாம். தேர்தல் கமிஷன் முன் வருமா?தொடர்புக்கு: ஆர்.ஜெயகுமாரி சமூக ஆர்வலர் ,இ - மெயில்: jeyakumarir55@gmail.com