புதுடில்லி : கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடிவேட்டையில், 'அல் - குவைதா' பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர்; அவர்களது தாக்குதல் சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டது. அல் - குவைதா அமைப்பு, நம் நாட்டில் மீண்டும் வேரூன்ற முயற்சி செய்து வருவது, இதன் வாயிலாகஅம்பலமாகி உள்ளது.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பிற்கு, ஆள் சேர்க்கும் பணிகள் நடந்து வருவதாக, புலனாய்வு அமைப்பினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
சோதனை
இதையடுத்து, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், ஒரே நேரத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஒன்பது பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டனர்.மேற்கு வங்கத்தில், நஜ்மஸ் சாகிப், அபு சுபியான், மைனுல் மோண்டல், லியு இயான் அகமது, அல் மமூன் கமல், அதிதுர் ரஹ்மான் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில், முர்ஷித் ஹாசன், இயாகூப் பிஸ்வாஸ், முஸராப் ஹுசைன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையின் போது, 'டிஜிட்டல்' சாதனங்கள், ஆவணங்கள், புத்தகங்கள், கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள்,வெடி பொருட்களைதயாரிக்கும் வழிமுறைகள்அடங்கிய கையேடுகள் என, பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கு
இது குறித்து, என்.ஐ.ஏ., செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு, ஆட்களை சேர்க்கும் பணிகளை செய்து வருவதாகவும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தாக்குதல்களை நடத்த சதி செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. கடந்த, 11ம் தேதி, இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், தலைநகர் டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து, தாக்குதல் நடத்த, அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த தாக்குதல்கள் மூலம், அப்பாவி மக்களை கொன்று, அனைவரது மனதிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே அவர்களின் எண்ணமாக இருந்தது.
பாகிஸ்தானில் இயங்கும் அல் - குவைதா அமைப்பு, இவர்களை இயக்கி வந்தது உறுதியாகியுள்ளது.அல் - குவைதா அமைப்பிற்கு நிதி திரட்டும் பணிகளிலும், இவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை கொள்முதல் செய்ய, டில்லிக்கு செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. முன்கூட்டியே கண்டறிந்து, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.அல் - குவைதா பயங்கரவாத அமைப்பிற்காக, மற்ற மாநிலங்களில் இயங்குவோர் குறித்த தகவல்களை பெற, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக, அல் - குவைதா அமைப்பின் நடவடிக்கைகள் நம் நாட்டில் இல்லாமல் இருந்தன. தற்போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதன் வாயிலாக, மீண்டும் அந்த அமைப்பு, நம் நாட்டில் வேரூன்ற முயற்சித்து வருவது அம்பலமாகி உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, ஆட்சியில் உள்ளது.
போலீஸ் மீது கவர்னர் பாய்ச்சல்
மேற்கவங்கத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் நேற்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,மாநிலத்தில் இவ்வளவு நடந்தும் போலீஸ் டி.ஜி.பி., தனக்கு எதுவும் தெரியாதது போல இருப்பது வருத்தத்திற்குரியது. அவரது இந்த நிலைப்பாடு பெரும் வேதனையாக உள்ளது. சட்டவிரோதமாக, குண்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் மாநிலமாக மேற்குவங்கம் மாறிவிட்டது. இதற்கு பொறுப்பானவர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE