திருநெல்வேலி:ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ய வந்த, தியேட்டர் உரிமையாளர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை சார்பதிவாளரே போலீசில் கையும் களவுமாக பிடித்து கொடுத்தார்.
திருநெல்வேலி கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் மோதிலால், 75. தியாகராஜ நகரில் இவருக்கு சொந்தமான, 11 சென்ட் நிலம் உள்ளது. தற்போது அதன் மதிப்பு, 1 கோடி ரூபாய். இந்நிலத்தை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கந்தசாமிக்கு விற்பனை செய்ய திருநெல்வேலி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேற்று சிலர் வந்திருந்தனர்.
நிலத்தின் உரிமையாளர் என வந்திருந்த நபரை பார்த்த, சார்பதிவாளர் சண்முக சுந்தரத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசாரை கண்டதும் கந்தசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அலுவலகத்திற்குள் உட்கார்ந்திருந்த கோவில்பட்டியை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் ரோஜர் கோயில்பிள்ளை, 42 நிலத்தின் உரிமையாளர் மோதிலால் போல நடித்த தியேட்டர் ஊழியர் செல்வராஜ், 63 நெல்லையை சேர்ந்த இசக்கிபாண்டி, 42 முத்துபாண்டி, 59 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சார்பதிவாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''இந்த பத்திரபதிவு குறித்து ஆரம்பத்திலேயே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நிலத்தின் உரிமையாளர் மோதிலால் வயது முதிர்ந்தவர் என ஆவணங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால் அவரை போல வந்த, செல்வராஜ் வயது குறைவு. 1974ல் தயாரிக்கப்பட்ட பத்திரத்தை போலவே அச்சு அசலாக போலி பத்திரம் தயாரித்திருந்தனர். நிலம் வாங்கும் நபர் குறித்தும் சந்தேகம் இருந்தது. ஆவணங்களை சரிபார்ப்பது போல உட்கார செய்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். போலீசாரை பார்த்ததும் கந்தசாமி தப்பி ஓடிவிட்டார். மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE