கோவை: மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, குறைக்கப்பட்ட சிலபஸ் வெளியிடாமல், காலம் தாழ்த்துவதால், முக்கிய பாடங்களை படிப்பதில், குழப்பம் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளி மாணவர்களுக்கு,பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்த அங்கீகரித்து, குறைக்கப்பட்ட சிலபஸ் வெளியிடப்பட்டது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 30 சதவீத சிலபஸ் குறைக்கப்பட்டதால், அம்மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி பெறுவதில் சிக்கல் இல்லை.
இழுபறி நீடிக்கிறது
மாநில கல்வித்திட்டம் பின்பற்றும் மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறையாக கூறி, நாளை முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை குறைக்கப்பட்ட சிலபஸ் வெளியிடுவதில் இழுபறி நீடிக்கிறது. ஜூன் துவக்கத்திலே, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், பாடத்திட்ட உருவாக்கத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அனைத்து வகுப்புகளுக்கும், சிலபஸ் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டிய பகுதிகள் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதோடு, தற்போது கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், குறைக்கப்பட்ட சிலபஸ் வெளியிடுவது குறித்து பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், அரசு இதை வெளியிடாமல் தாமதிப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

விரைவில் வெளியிட வேண்டும்
பெற்றோர் சிலர் கூறுகையில், 'பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. பெரும்பாலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், வீடியோ கன்டென்ட் வழங்கி, மாணவர்களே படிக்கவும், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறியவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை வகுப்புகளுக்கு, அறிவியல், கலைப்பிரிவில் முக்கிய பாடங்களுக்கு இரு தொகுதிகள் உள்ளன. பாடப்புத்தக பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் திணறுகின்றனர்.குறைக்கப்பட்ட சிலபஸ் வெளியிட்டாலாவது, எதை படிப்பது என்ற புரிதல் ஏற்படும். விரைவில் இதை வெளியிட அரசு முன்வர வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE