சென்னை: தமிழகத்தின் பொருளாதார நிலை, இரண்டு மாதங்களில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்நிலை குழுவை தமிழக அரசு அமைத்து இருந்தது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையிலான 24 பேர் கொண்ட இந்த குழு பலமுறை ஆலோசனை மேற்கொண்டது. இதனையடுத்து தமிழக பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான தங்களது கருத்துகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.,21) தாக்கல் செய்தார்.

அறிக்கை அளித்த பின்னர் ரங்கராஜன் அளித்த பேட்டி:
தமிழகத்தின் பொருளாதார நிலை, இரண்டு மாதங்களில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும். 2020-21ல் பொருளாதார வளர்ச்சி 1.71 சதவீதமாக இருக்கும் எனவும், சரிவு ஏற்படலாம் எனவும் கணித்துள்ளோம். வருமானம் குறைந்து, செலவு அதிகரிப்பதால், அரசின் கடன் சுமை அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும் அதிகரிக்கும். சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் செலவிட பரிந்துரைத்துள்ளோம்.
கட்டுமானத்துறை வசம் உள்ள, 3,200 கோடி ரூபாயை செலவிடவும், நகர்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பரிந்துரைத்துள்ளோம். வரியை அதிகரிக்க எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.