கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் கோவை ஆளுங்கட்சி புள்ளி தொடர்பு?

Updated : செப் 23, 2020 | Added : செப் 22, 2020
Share
Advertisement
கோவை, சுண்டக்காமுத்துாரில் நடந்த, நடமாடும் பரிசோதனை மையம் துவக்க விழாவுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். ஆளுங்கட்சி பிரமுகர்களும், அதிகாரிகளும் கூட, சமூக இடைவெளியின்றி நின்றிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, நம்மூர் போலீஸ்காரங்க ஒருதலைபட்சமா செயல்படுறாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாக்கா, ஐந்து பேருக்கு மேல் பொது இடங்களில் கூடினால்,
கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் கோவை ஆளுங்கட்சி புள்ளி தொடர்பு?

கோவை, சுண்டக்காமுத்துாரில் நடந்த, நடமாடும் பரிசோதனை மையம் துவக்க விழாவுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். ஆளுங்கட்சி பிரமுகர்களும், அதிகாரிகளும் கூட, சமூக இடைவெளியின்றி நின்றிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, நம்மூர் போலீஸ்காரங்க ஒருதலைபட்சமா செயல்படுறாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாக்கா, ஐந்து பேருக்கு மேல் பொது இடங்களில் கூடினால், தொற்று நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ், எதிர்க்கட்சிக்காரங்க மீது வழக்கு பதியுறாங்க. தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சிக்காரங்க மீது வழக்கு பதிஞ்சிருக்காங்க,''

''ஆனா, ஆளுங்கட்சி சார்பில் ஏகப்பட்ட கூட்டம் நடந்திருக்கு; நுாத்துக்கணக்குல தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க. அவுங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எங்களுக்கு ஒரு நியாயம்; ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயமான்னு, எதிர்க்கட்சிக்காரங்க கேட்குறாங்க,''''அவுங்க சொல்றதும் சரிதானே,'' என்ற சித்ரா, ''உளவுத்துறையை சேர்ந்த இருவர் மீது, ஏகப்பட்ட புகார் போயிருக்குதாம்,'' என, அடுத்த விசயத்துக்கு தாவினாள்.

''உளவுத்துறை பிரச்னை, எல்லா ஸ்டேஷனிலும் இருக்கு; நீங்க சொல்றது எந்த ஸ்டேஷன்,''''ஷாப்பிங் மால் எதிரே செயல்படுற ஸ்டேஷன்ல இருக்குற அந்த இருவர், மேலிடத்துக்கு போட்டுக் கொடுப்பதில் வல்லவர்களாம். இவர்களது பேச்சை யாராவது கேட்கலைன்னா, எக்குத்தப்பா, போட்டுக் கொடுக்குறாங்களாம்.''இந்த ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ள மட்டும், 23 மதுக்கடை பார் செயல்படுதாம்; நடுநிசியானாலும் சரக்கு வாங்கலாமாம். இதுக்கெல்லாம் இருவரில் ஒருவர் பொறுப்பாம்; பார் முன்னாடி நின்று, கண்ணசைத்தால், கேஸ் கணக்கில் சரக்கு கொடுக்குறாங்களாம். மாமூலும் பிசிறு தட்டாம பட்டுவாடா ஆகுதாம்; உயரதிகாரிக்கு சரி பாதி, பிரித்துக் கொடுத்து விட்டு, ராஜா போல் வலம் வருகின்றனராம்,''

''உளவுத்துறை, ஊழல் துறையா மாறிட்டு இருக்குன்னு சொல்லுங்க,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''அதெல்லாம் சரி, ஆளுங்கட்சிக்காரங்க, கரன்சி வேட்டையில் பிஸியா இருக்காங்களாமே,''''அதுவா, சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு புதுசா ஆள் எடுக்குறதுக்கு விண்ணப்பம் வாங்கியிருக்காங்க. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருத்தருக்கும், 'கோட்டா' ஒதுக்கி இருக்காங்களாம். அதனால, இரண்டு லட்சத்தில் இருந்து, மூணு லட்சம் ரூபாய் வரைக்கும் பேரம் பேசிட்டு இருக்காங்களாம். லட்சக்கணக்குல பணம் கொடுத்தும், போஸ்டிங் வாங்குறதுக்கு ஏகப்பட்ட பேரு தயாரா இருக்காங்களாம்,''

''லஞ்சம் கொடுத்து, அரசு பணிக்கு வந்தா, அவுங்களும் லஞ்சம் வாங்கத்தானே செய்வாங்க, இதுக்கெல்லாம் தீர்வே கிடைக்காதா,''''ஆமாக்கா, நீங்க சொல்றதும் உண்மைதான்! டி.என்.பி.எஸ்.சி., மூலம் நியமித்தால், முறைகேடுகளை ஓரளவு தடுக்கலாம்னு நினைக்கிறேன்,''

''மித்து, அதெல்லாம் நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கற மாதிரி தெரியலை. ஏன்னா, கார்ப்பரேஷன்ல மறுபடியும், 530 பணியிடத்துக்கு துாய்மை பணியாளர்களை நேரடி நியமன முறையில், நியமிக்கப் போறாங்களாம். இதிலும், ஆளுங்கட்சிக்காரங்களுக்கு கரன்சி மழை கொட்டப் போகுது,''''மறுபடியும் ஜெயிப்பமோ, இல்லையோ, இப்பவே, கல்லா கட்டலாம்னு முடிவு செஞ்சிட்டாங்க போலிருக்கு,''விழா முடிந்ததும், சுண்டக்காமுத்துார் குளக்கரை வழியாக, இருவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர். கடல் போல் குளத்தில் தண்ணீர் ததும்பியிருந்தது.

அதைப்பார்த்த சித்ரா, ''நல்லவேளை, அவ்ளோ தண்ணீரையும் ஆற்றில் விடாம, குளத்துல தேக்குறாங்க. வட கிழக்கு பருவ மழை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, அணைக்கட்டுகளை சீரமைக்கிற வேலையை செஞ்சா நல்லாயிருக்கும்,'' என்றாள்.''அக்கா, ஆளுங்கட்சிக் காரங்களுக்கு நெருக்கமா இருந்தும் கூட, பொதுப்பணித்துறையில் கோலாச்சிக்கிட்டு இருந்த ஒரு அதிகாரியை துாக்கியடிச்சாங்க. அதனால, இப்ப இருக்குற அதிகாரிங்க, கவனமா வேலை பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன்,''

''அதெல்லாம் இருக்கட்டும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியா இருந்த ரமேஷ்குமாருக்கு, இன்னும் வேறு பதவி கொடுக்கலையாமே,''''ஆமா, நானும் கேள்விப்பட்டேன்; உண்மைதான்! வி.ஐ.பி.,க்கு 'விசுவாசமா' இல்லாததால், கழட்டி விட்டுட்டதா, பேசிக்கிறாங்க. அதனால, அதிகாரிகள் மன உளைச்சலில் இருக்காங்களாம்,''''மித்து, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, உயர் பொறுப்பில் இருக்குற சில அதிகாரிகள், சந்திச்சிருக்காங்க. அப்போ, இனியும் ஆளுங்கட்சிக்காரங்க நெருக்கடிக்கு தலையாட்டக் கூடாதுன்னு பேசியிருக்காங்க. இந்த விஷயம், 'லீக்'காயிடுச்சு. அவுங்களுக்கு, 'ஷாக்' கொடுக்குறதுக்காக, சில அதிகாரிகளின் பதவியை பறிச்சு, ஆட்டம் காட்டியிருக்காங்களாம்,''

''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''ஆளுங்கட்சி பிரமுகரும் என்.ஐ.ஏ., கண்காணிப்பு வளையத்துல இருக்காராமே,'' என, சப்ஜெக்ட்டை மாற்றினாள்.''அதுவா, கேரளா தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையை சேர்ந்தவரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்காங்க. துபாயில் இருந்து தங்கம் கடத்திட்டு வந்ததுல, ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவரும், சம்பந்தப்பட்டு இருக்காராம். அவரை துாக்குனா, ஆளுங்கட்சியில் அதிகாரம் செலுத்திக்கிட்டு இருக்குற வட்டாரமே சிக்குமாம்,''

''அப்படியா,'' என வாயைப் பிளந்த மித்ரா, ''ஜி.எஸ்.டி., அதிகாரிகளும் நம்மூரில் ஆய்வு நடத்துனாங்களே,'' என, 'ரூட்' மாறினாள்.''ஆமாப்பா, செங்கல் சூளை உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைஞ்சு போயிருக்காங்க. ஒரு நாளைக்கு, 15 லோடு செங்கல் அனுப்புற பெரிய சூளை உரிமையாளர்கள் கூட, ஒரு வருஷத்துக்கே, 20 லோடு செங்கல் வித்ததா, கணக்கு காட்டியிருக்காங்க,''''ஓ... அப்புறம்...''

''பல சூளைகள், ஒரே பெயரில் இயங்கியிருக்கு. ஜி.எஸ்.டி., கட்டணும்ங்கிறதே பலருக்கு தெரியலையாம். மின் இணைப்பு கூட, விவசாயி பெயரில் வாங்கியிருக்காங்க. சூளை உரிமையாளர்களில் சிலர், பல்வேறு தொழில்களில் கோடிக்கணக்கில் முதலீடு செஞ்சிருக்காங்களாம். இனி, ஐ.டி., 'ரெய்டு' வந்தால், என்ன செய்றதுன்னு, கலங்கிப் போயிருக்காங்களாம்,''

'' வி.ஐ.பி., பால் பிசினஸ் செய்யப் போறதாவும் கேள்விப்பட்டேன், உண்மையா'' என, நோண்டினாள் மித்ரா.''நானும் கேள்விப்பட்டேன்; செவி வழி செய்திதான்! மதுரை பக்கமுள்ள ஒரு கம்பெனியை விலைக்கு வாங்கியிருக்கறதா, சொல்றாங்க,'' என்ற சித்ரா, பேரூர் ஆண்டிபாளையம் பிரிவு அருகே, ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரை பார்த்து ரசித்த மித்ரா, ''நொய்யல் ஆற்றை சீரமைக்க, 230 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க.

ஏப்பம் விடாம, வேலையை ஒழுக்கமா செய்யணும்,'' என்றபோது, மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.இருவரும் மரத்தடியில் ஒதுங்கினர். அப்போது, மாநகராட்சி ஜீப், அவர்களை கடந்து சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''கார்ப்பரேஷன் ஆபீசுல களையெடுப்பு நடக்குதாமே. ஒரே நாள்ல, 20 பேருக்கு, 'டிரான்ஸ்பர்' ஆர்டர் பறந்துச்சாமே,'' என, கிளறினாள்.''ஆமாக்கா, வடக்கு மண்டல அலுவலகத்துல, அஞ்சு உதவியாளர்கள் வச்சிருந்த பில் கலெக்டரை, வேறிடத்துக்கு மாத்திட்டாங்க. கிழக்கு மண்டலத்துல இரண்டு பேருக்கு 'மெமோ' கொடுத்திருக்காங்க,''''மித்து, 'மெமோ' கொடுக்கிறதெல்லாம், பெயரளவு நடவடிக்கை தான். தப்பு செஞ்சதா தெரிஞ்சா, உடனே, 'போஸ்ட்டிங்'ல இருந்து துாக்கணும்; 'சஸ்பெண்ட்' செய்யணும்.

அதுக்கப்புறம், துறை ரீதியா விசாரணை செய்யணும். இதுக்கு முன்னாடி இருந்த கமிஷனர்கள், அப்படிதான் நடவடிக்கை எடுத்திருக்காங்க,''''இப்ப, என்னடான்னா, முறைகேடு செஞ்சதை ஆதாரப்பூர்வமா கண்டுபிடிச்சும் கூட, 'மெமோ' கொடுத்திருக்கிறதா, சப்பைக்கட்டு கட்டுறாங்க,''''கார்ப்பரேஷன் வெப்சைட்டுல, ஜெ., படத்தை துாக்கிட்டாங்களாமே,''''ஆமாக்கா, அதான் ஆச்சரியமா இருக்கு! 'அம்மா' ஆட்சி நடத்துறோம்னு, மேடைக்கு மேடை சொல்றாங்க. கலைவாணர் அரங்கத்துல கூட, ஆளுயர படம் வச்சிருந்தாங்க. ஜெ., படம் இல்லாததால, ஒரே நாள் நைட்டுல, பிளக்ஸ் பேனரையே மாத்துனாங்க,''

''இதெல்லாம் தெரிஞ்சிருந்தும், வெப்சைட்டுல இருந்து, ஜெ., படத்தை துாக்கியிருக்காங்கன்னா, துணிச்சல் ஜாஸ்திதான்,''''மித்து, புது கமிஷனர், 'ஜாயின்' பண்ணி, 20 நாளைக்கு மேலாகியும், அவரது புகைப்படத்தை கூட, இன்னும் 'அப்டேட்' செய்யாம இருக்காங்க. அப்ப, கார்ப்பரேஷன் ஐ.டி., விங் எந்தளவுக்கு செயல்படுதுன்னு, புரிஞ்சுக்கிங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''நம்மூர்ல நோய் பரவல் எப்படியிருக்கு, 'அப்டேட்' சொல்ல முடியுமா,'' என, கிளறினாள்.

''ஏகப்பட்ட பேருக்கு டெஸ்ட் எடுக்குறோம்; பாதிப்பு குறைவா இருக்குன்னு ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க சொல்றாங்க. ஆனா, பீளமேடு, கணபதி, சூலுார் தீயணைப்பு அலுவலகங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்களில் ஏகப்பட்ட பேருக்கு தொற்று பரவியிருக்காம்; வெளியே சொல்லக்கூடாதுன்னு, தடையுத்தரவு போட்டிருக்காங்களாம்,''

''அப்புறம், நவீன வசதி இல்லாத, சில பிரைவேட் ஆஸ்பத்திரிகளிலும் டிரீட்மென்ட் கொடுக்குறதுக்கு பர்மிஷன் வழங்கியிருக்காங்களாம். சுந்தராபுரத்தில் இருக்குற மூன்றெழுத்து ஆஸ்பத்திரி தலைவர் உட்பட, டாக்டர்களுக்கும் தொற்று பரவியிருக்காம்,''''அப்ப, நம் உயிர்; நம் கையில்னு சொல்லுங்க,'' என்ற மித்ரா, ''டிரைவிங் ஸ்கூல் மூலமா வந்தாதான், லைசென்ஸ் கொடுக்குறாங்களாம்,'' என, கடைசி சப்ஜெக்ட்டுக்கு சென்றாள்.

''அப்படியா, எந்த ஏரியாவுல, இந்த கூத்து நடக்குது,''''கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் வந்து, விண்ணப்பம் செஞ்சாலும், 'எட்டு' போட்டு காட்டினாலும், லைசென்ஸ் கொடுக்குறதில்லையாம். டிரைவிங் ஸ்கூல் மூலமா வர்ற விண்ணப்பங்களை மட்டும், கடவுள் பெயரை கொண்ட, பிரேக் இன்ஸ்பெக்டர், 'ஓகே' செய்றாராம்,''''பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், அவரது கணவரும், ஆர்.டி.ஓ.,வை நேரில் பார்த்து, நடந்ததை சொல்லியிருக்காங்க.

உடனே, இருக்கையில் இருந்து வெளியே வந்த அவர், 'எட்டு' போட சொல்லியிருக்கிறார். அந்த பெண், ஸ்கூட்டரில் பறந்து காட்டியதும், லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்,'' என்றபடி, வீட்டை நோக்கி ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X