சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

வாங்க, ஆனந்தமாக வாழலாம!

Updated : செப் 25, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு பயந்து, உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் மரணங்கள், அனல் பறக்கும் விவாதத்தை, அரசியல் அரங்கில் கிளப்பியுள்ளன. தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதால், அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என, ஒருவர் எண்ணுகிறார்; அது உண்மை அல்ல. தற்கொலை, பிரச்னைகளின் துவக்கம். மனச்சோர்வு, மன அழுத்தம், மனச்சிதைவு, குற்ற உணர்வுகள், ஆளுமைக் கோளாறுகள், போதைப்
 
வாங்க, ஆனந்தமாக வாழலாம!

தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு பயந்து, உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் மரணங்கள், அனல் பறக்கும் விவாதத்தை, அரசியல் அரங்கில் கிளப்பியுள்ளன. தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதால், அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என, ஒருவர் எண்ணுகிறார்; அது உண்மை அல்ல.

தற்கொலை, பிரச்னைகளின் துவக்கம். மனச்சோர்வு, மன அழுத்தம், மனச்சிதைவு, குற்ற உணர்வுகள், ஆளுமைக் கோளாறுகள், போதைப் பொருட்கள் பழக்கம், பொருளாதாரச் சிக்கல், காதல் தோல்வி, உறவுகளில் சிக்கல், வேலையில்லா திண்டாட்டம், கடன் பிரச்னைகள், குழந்தைகள் மேல் அதிகமாக கோபப்படுதல் ஆகியவை, தற்கொலைக்கான முக்கிய காரணங்கள்.
ரசாயன மாற்றம்தற்கொலை ஒரே ஒரு கணத்தில் நிகழ்வது என்றாலும், ஒவ்வொரு தற்கொலைக்கும் பின்னணியில் உயிரியல், உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகள் உள்ளன. மூளையில் சுரக்கும், 'செரோடோனின்' ரசாயன குறைபாடு, மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்களை துாண்டக்கூடிய உயிரியல் காரணி. ஒருமுறை தற்கொலை முயற்சி மேற்கொண்டவர், மீண்டும் அதற்கு முயற்சிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.எனவே, உடல் உபாதைகளுக்கு டாக்டரிடம் சிகிச்சை பெறுவது போல, மனதில் ஏற்படும் நோய்களுக்கு, மனநல டாக்டரை அணுகுவது சிறந்தது. போதுமான வழிகாட்டுதல்கள் இல்லாததால் தான், தற்கொலை எண்ணங்கள் தலை துாக்குகின்றன; குறிப்பாக, தேர்வு கால மாணவர் தற்கொலைகள்.

தேர்வுக்கு தயாராவதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள் போல, தேர்வு முடிவு எவ்வாறு இருப்பினும், எதிர்கொள்வதற்கான உளவியல்சார் பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், தேர்வில் தோல்வி அடைபவர்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், மதிப்பெண் குறைவு என்பது, பெரும் பிரச்னையாக உருவெடுக்கிறது.அதுவே, மன அழுத்தம் ஏற்பட முக்கியக் காரணம். ஒரு மதிப்பெண் குறைந்தாலும் வாழ்வின் போக்கே மாறிவிடும்; எதிர்காலமே பறிபோய்விடும்; குடும்பத்துக்கு தலைக்குனிவு ஏற்பட்டு விடும் என்பது போன்ற மாயை, எண்ணம் பரவலாக உள்ளது. இதுவே, தேர்வு கால தற்கொலை துாண்டலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

தேர்வில் பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் போய்விடுமோ, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதோ என்ற அச்சத்தால், பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, தேர்வுக்கு முன், ஒவ்வொரு பயிற்சி மையத்திலும், பள்ளியிலும், கல்லுாரிகளிலும் உளவியல் சார்ந்த வழிகாட்டி, நம்பிக்கை பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.குழந்தைகளின் உணர்வுகளை ஆசிரியர், பெற்றோர் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள், தங்களின் குறைகளை சொல்லும் போது கூர்ந்து கவனித்தாலே பாதி பிரச்னை தீர்ந்து விடும். தற்கொலை தடுப்பு ஆலோசனை மைய அலைபேசி எண்கள், உதவி எண்களை, மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை, தீர்வு அல்ல என்பதை, அனைவரும் உணர வேண்டும். தீராத பிரச்னை என்ற ஒன்று, இவ்வுலகில் இல்லவே இல்லை. இரவு - பகல் மாறி மாறி வருவது போல், வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் என்பதை, ஆழ்மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.தற்கொலை தனி மனித விவகாரமாக இருப்பினும், தற்கொலை தடுப்பு என்பது, சமூகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும். இந்த சமூகம், விழிப்புடன் செயல்பட்டால் இத்துயரங்களைத் தடுக்கலாம்.


அவசர யுகமும் தீராத சோகமும்முன்பெல்லாம், 'பேமிலி டாக்டர்' என்ற, முறை இருந்தது; அதாவது, குடும்ப மருத்துவர் முறை. நோயாளியின் குடும்பத்தினரைப் பற்றி, அந்த குடும்ப டாக்டருக்கு அத்துபடியாக தெரிந்திருக்கும். வேறு ஏதாவது மனக் கஷ்டங்களுடன் வந்தாலும் கூட, நோயாளிக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைப்பார். இதன் வாயிலாக, தற்கொலை எண்ணங்கள் பலருக்கு தலைதுாக்காமல் தடுக்கப்பட்டன.ஆனால், இன்றைய அவசர யுகத்தில் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை. அவ்வாறு, பார்ப்பதால் மருத்துவ அறிக்கைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. பெரும்பாலும் அங்கே, அதிக உரையாடல்களுக்கு இடமில்லை.

முந்தைய காலங்களில், நம் முன்னோருக்கு உணவுப் பிரச்னையே தலையாய பிரச்னை. தற்போதைய தலைமுறைக்கு பணப் பிரச்னை. அடுத்த தலைமுறைக்கு, அன்பு, பாசம், ஆதரவு இல்லாமை ஆகிய பிரச்னைகள் வரப்போகின்றன என்பதை, நடக்கும் நிகழ்வுகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு பிரச்னையில் இருந்து மீளவும், தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கவும், ஒருவருக்கு பிறரின் அன்பும், ஆறுதலும், ஆதரவும் அவசியம்.


தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம்இவை இல்லாததாலே, தற்கொலை எண்ணம் தலைதுாக்குகிறது. வளர் இளம் பருவத்தினரின் தற்கொலைகள் அதிகரிப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் மேற்கண்ட உண்மைகள் புலப்படும். பிள்ளைகளின் மரணத்துக்கு, பெற்றோரின் தவறான அணுகுமுறை, முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. கல்வி, வேலை, ஊதியம், திறமை ஆகியவற்றை பிறருடன் ஒப்பிட்டு பேசி கேலி செய்வதும், 'இந்தப் படிப்பை நீ முடிக்காவிட்டால்... தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டால்.... வாழ்க்கையே பாழாய் போய்விடும்.

நம் குடும்ப மானம், மரியாதை எல்லாம் போய்விடும்' என்ற பெற்றோரின் ஆதங்கப் பேச்சும், ஆத்திரமும், பிள்ளைகளின் திடமான மனதை நிலைகுலையச் செய்து விடுகின்றன. பெற்றோர் சொல்வது போல நடந்துவிடுமோ என்ற மன பீதி, தற்கொலைக்கு தள்ளுகிறது.'நீ என்ன கவனமாக படி; தீவிரமாக முயற்சி செய்; எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் கவலையில்லை; வேறு வாய்ப்புகளும் உள்ளன' என, தைரியம் சொல்லும் பெற்றோரின் பிள்ளைகள், பெரும்பாலும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஒருவேளை தோல்வி அடைய நேரிட்டாலும் பெற்றோரின் அரவணைப்பில், ஆறுதல் தேடிக் கொள்கின்றனர். வெற்றி பெற குழந்தைகளுக்கு எந்தளவிற்கு ஊக்கம் அளிக்கிறோமோ, அதே அளவிற்கு, தோல்வியைத் தழுவும் போது, மனம் தளராமல் தாங்கிக் கொள்வதற்கான பக்குவத்தையும் எடுத்துரைக்க வேண்டும்.

தோல்வியே தழுவாமல் ஒருவர் முன்னேறிக் கொண்டே போவாரானால், தோல்வி வரும் போது, தாங்கும் பக்குவமின்றி, தன் இன்னுயிரை போக்கிக்கொள்ளவே துணிவார். எனவே, தோல்விக்கும் ஒவ்வொருவரும் மனப்பக்குவப்பட வேண்டும்; தங்களின் பிள்ளைகளை பக்குவப்படுத்த வேண்டும்.ஒரு பொருளை குழந்தை கேட்டதும் பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்; பொறுமையுடன் பல நாள் காத்திருக்கும் அனுபவத்தை, அவர்களுக்கு கற்றுத் தருவதில்லை.பிள்ளைகள் ஏமாற்றம் அடையாமலே, அதுபற்றி அவர்களுக்கு தெரியாமலே வளர்த்து ஆளாக்கியும் விடுகின்றனர். கேட்டதும் கிடைக்க வேண்டும்; தாமதத்தை தாங்கிக்கொள்ள முடியாது; தோல்வி நிகழவே கூடாது; தோற்றால் கதறி விடுவேன் என, கூச்சலிடும் பிள்ளைகளை பார்த்திருக்கிறேன். இதுவும், தற்கொலைகளுக்கு மூல காரணம். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலையும் ஏற்றுக்கொள்ளும் பாங்கை குழந்தைகளுக்குக் கற்றுத்தராதது பெற்றோரின் தவறே.தனி குடும்பம்; தீராத தவிப்புபொருளாதாரத்தை முன்னிருத்தி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய, 'டிஜிட்டல்' சமூகம், 'அவரவர் வருமானம் அவரவர் வாழ்க்கை' என்றதொரு அபாய இல்லத்தில் குடியேறிவிட்டது. தாத்தா பாட்டிகள் உடன் இல்லாமல், பெற்றோரும் பணிக்கு சென்றுவிட்டதால், பூட்டப்பட்ட தனிச் சிறை போன்றதொரு, 'அபார்ட்மென்ட்' வீட்டில், 'டிஜிட்டல்' சாதனங்களுடன் நேரத்தை கழிக்கும் குழந்தைகள், மன உளைச்சலுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.சம்பாத்தியமும், சவுகரியமுமே வாழ்க்கை என ஓடும், இன்றைய இளைய தலைமுறையினர், வயதான பெற்றோரை உடன் வைத்துக்கொள்ள தயங்குகின்றனர்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை, நகர்ப்புறங்களில் தகர்ந்து போனதால், தம்பதிகளின் பிரச்னையின் போதும், பிள்ளைகளால் பிரச்னைகள் வரும் போதும், ஆறுதல் சொல்லக்கூட அருகில் யாருமிருப்பதில்லை; சாவுக்கு கூட, 10 பேர் கூடாத இயந்திரத்தனமான வாழ்க்கையையே பலரும் வாழ்வதை பார்க்க முடிகிறது. இந்த தனக்கு தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதலும், தற்கொலைகளுக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. வீட்டில் வயதானவர்கள் இருப்பது பாரமல்ல; பாக்கியம் என்பதை உணராத வரை உயிர் பலி தொடரவே செய்யும்.
தீராதது ஒன்றுமில்லைதற்கொலை, அந்த கணப்பொழுதில் தோன்றும் எண்ணத்தால் மட்டும் நிகழ்ந்து விடுவதில்லை. அவசர கதியில் பல சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பாலும் நிதானமாக திட்டமிட்டே நிகழ்கின்றன. மனிதனின் மனதில் ஏதாவது ஒரு விஷயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் போது உயிரை மாய்த்துக்கொண்டால் என்ன, என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அது, பெரும்பாலானோருக்கு நொடியில் மறைந்து விடுகிறது.

மிகச் சிலருக்கு மட்டும், அதுபோன்ற எண்ணம், பிரச்னைகள் வரும் போதெல்லாம் தலைதுாக்கிக் கொண்டே இருக்கும்.அவ்வாறான சூழலில் அவர், தற்கொலைக்கான வழிமுறைகளை தேடுகிறார்; இறுதியில் தற்கொலை முயற்சியிலும் இறங்கி விடுகிறார். இது போன்ற எண்ணம் தோன்றும் போதே, அவ்வாறான வார்த்தைகளை ஒருவர் உதிர்க்கும் போதே, உடனிருக்கும் உறவுகள் உஷாரடைந்து ஆறுதல் சொல்ல வேண்டும். அருகிலிருக்கும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஆலோசனை வழங்கிட வேண்டும். அவ்வாறு செய்தால் தற்கொலை எண்ணங்களை துவக்கத்திலேயே தடுக்க முடியும்.எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உள்ளன. ஒன்று, நாம் பிரச்னையில் இருந்து விடுபட வேண்டும். அல்லது, பிரச்னை நம்மை விட்டு விலக வேண்டும். பிரச்னை நம்மை விட்டு விலகுவது நம் கையில் இல்லை.
ஆனால், பிரச்னையில் இருந்து நாம் விலக முடியும். எந்த ஒரு பிரச்னையையும் அறிவுப் பூர்வமாக அணுகுவதன் வாயிலாக தெளிவு பிறக்கும்.பிரச்னையை உணர்வு பூர்வமாக அணுகினால் பாதிப்பு தான். ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அவர் வேண்டுமானால் பிரச்னையில் இருந்து விடுபடலாம்; ஆனால், அந்த பிரச்னை, அவரது குடும்பத்துக்கு மாறி, அவர்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடுகிறது.

'அரிது அரிது மானிடராதல் அரிது. மானிடராயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது' இப்படிப்பட்ட அருமையானதொரு வாழ்க்கையை பெற்ற நாம், எந்தவொரு பிரச்னை வந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஆனந்தமாய் வாழும் வழிவகை காண்போம்; வாங்க, ஆனந்தமாக வாழலாம்! டாக்டர் என்.எஸ்.மோனி மனநல மருத்துவர்தொடர்புக்கு: 98422 13043

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
25-செப்-202013:22:16 IST Report Abuse
கல்யாணராமன் சு. மிகவும் அருமையான பதிவு .... இந்த பதிவினை, எல்லா பெற்றோர்களுக்கும் அனுப்பவேண்டும் ...கடைபிடிக்க அறிவுறுத்தவேண்டும் ... பெற்றோர்களுக்கு மட்டுமல்ல...தங்களது சுயநலத்துக்காக மக்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் அனுப்பவேண்டும் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X