புதுடில்லி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 செப்டம்பரில், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சர்ச்சை
அங்கு, இரண்டரை மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2016 டிசம்பர், 5ல், உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
அப்பல்லோ டாக்டர்களின் சாட்சியம், தவறாக பதிவு செய்யப்படுவதாக கூறி, கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. இம்மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இம்மனு, கடந்தாண்டு, ஏப்., 26ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையை விலக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டதா, தவறுகள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரிக்க, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை துரிதமாக நடந்து வந்த நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கமிஷனின் உறுப்பினர்களுக்கு, மாநில அரசு ஊதியம் வழங்கி வருகிறது. எனவே, விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, நீதிமன்றம் விலக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை
இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'தமிழக அரசின் மனு மீது, இரண்டு வாரத்திற்குள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள்
உத்தரவிட்டு, வழக்கை, அடுத்த மாதம், 12க்கு ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE