அ.தி.மு.க.,செயற்குழுவில் மோதல் வெடிக்குமா?| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,செயற்குழுவில் மோதல் வெடிக்குமா?

Updated : செப் 27, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (16)
Share
அ.தி.மு.க., - அ.ம. மு.க., இணைப்பு பேச்சுக்கு,பா.ஜ., மேலிடம் சிலநிபந்தனைகளை விதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் யார்; முதல்வர் வேட்பாளர் யார்; வழிகாட்டு குழுவில் இடம்பெற போவது யார் என்பது தொடர்பாக, வரும், 28 ல் கூடும், கட்சி செயற்குழுவில் முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது.வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வை இணைக்க,
டில்லி, தினகரன், ரகசியபேச்சு, அ.தி.மு.க., செயற்குழு, மோதல்

அ.தி.மு.க., - அ.ம. மு.க., இணைப்பு பேச்சுக்கு,பா.ஜ., மேலிடம் சிலநிபந்தனைகளை விதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் யார்; முதல்வர் வேட்பாளர் யார்; வழிகாட்டு குழுவில் இடம்பெற போவது யார் என்பது தொடர்பாக, வரும், 28 ல் கூடும், கட்சி செயற்குழுவில் முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வை இணைக்க, அக்கட்சியின் துணை பொதுச் செயலர் தினகரன் விரும்புகிறார். இதனால், பா.ஜ., மேலிடத்தில் பேச்சு நடத்த, ௨௦ம் தேதி, தினகரன் டில்லி சென்றார்.


தினகரன் சரண்பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும், தினகரனையும் சந்திக்க வைக்க, மாநில பா.ஜ., நிர்வாகி ஒருவரும், அ.தி.மு.க., - எம்.பி., ஒருவரும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், தினகரனை சந்திக்க, கடைசி நேரத்தில், நட்டா மறுத்து விட்டார். அதனால், உள்துறைஅமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான சிலரை, தினகரன் சந்தித்து பேசினார்.

இரு கட்சிகளின் இணைப்பு குறித்து, அமித் ஷா தரப்பில்,சில முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ளதாக தெரிகிறது. பா.ஜ., மேலிடம் விதிக்கும் நிபந்தனைகளை, சசிகலா ஏற்றால், இணைப்பு பேச்சு தொடர வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, சசிகலாவை விரைவில் சந்தித்து பேச உள்ளார், தினகரன். அதன் பின்னரே, இணைப்பு பேச்சு வெற்றி பெறுமா; தோல்வி அடையுமா என்பது தெரிய வரும். அதனால் தான், அ.தி.மு.க.,வில் சசிகலாவை சேர்ப்பது குறித்த கேள்விக்கு, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

ஆனால், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், 'கட்சி மேலிடம் முடிவு செய்யும்' என்றார். ராமநாதபுரத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் இ.பி.எஸ்., 'இந்த இடத்தில், இந்த கேள்வி கேட்க வேண்டாம்' என, பதில் தெரிவிக்க மறுத்தார்.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி, 'பா.ஜ.,விடம் தினகரன் சரண் அடைந்து விட்டார்; சசிகலாவை சேர்ப்பது குறித்த முடிவை, கட்சி தலைமை தான் எடுக்கும்' என்றார்.இந்த சூழ்நிலையில், 'கொரோனா தடுப்பு பணிகளில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., மீண்டும் தொடருவதையே, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
கேள்வியும், குழப்பமும்அ.தி.மு.க.,வினரிடமும், பொது மக்களிடமும், முதல்வருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், அ.ம.மு.க.,வை இணைப்பதால், இன்னொரு அதிகார மையத்தை வளர்க்க வேண்டுமா என்ற கேள்வியும், குழப்பமும், இ.பி.எஸ்., தரப்பில் எழுந்துள்ளது.அதேசமயம், முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுக்க, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தயாராக இல்லை. அதேபோல, பொதுச் செயலர் பதவியை, பன்னீருக்கு தர, இ.பி.எஸ்., தரப்பும் விரும்பவில்லை.
இதனால், சசிகலா சேர்ப்பில், பா.ஜ., தலையீட்டை, பன்னீர் தரப்பு ஆதரிப்பதாக கூறப்படுகிறது. இவ்விஷயத்தில், பா.ஜ., நிபந்தனைகளை ஏற்று, அ.தி.மு.க.,வில், சசிகலா இணைந்தால், அவரதுதலைமையில் பயணிக்கலாமா அல்லது தனி அணியாக செயல்படலாமா என்ற குழப்பத்தில், பன்னீர் தரப்பினர் உள்ளனர்.

எனவே, நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் யார்; கட்சியின் பொதுச் செயலர் யார்; வழிகாட்டு குழுவில் இடம்பெற போவது யார் என்ற, பேச்சு எழுவதற்கு வாய்ப்பு இல்லை.செயற்குழு கூட்டத்தில், 'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலரும்; பிரதமர்மோடி பாராட்டுக்கு நன்றி; அ.தி.மு.க., அரசின் சாதனைகளுக்கு பாராட்டு' என்ற தீர்மானங்கள் மட்டும், நிறைவேற வாய்ப்பு உள்ளது.சசிகலா வந்த பின், அ.தி.மு.க.,வுடன் அ.ம.மு.க., இணையுமா; இணையாதா என்ற முடிவு தெரிந்த பின்னரே, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விகளுக்கு விடை தெரிய வரும்.இந்த விடைகளும், பா.ஜ., மேலிட ஆசியுடன் தான் தெரிய வரும் என்கிறது, ஆளும் கட்சி வட்டாரம்.
பண்ருட்டிக்கு பன்னீர் அழைப்பு!முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு எதிராககாய் நகர்த்தி வரும், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து, செயற்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், தங்கள் செல்வாக்கை காண்பிக்க, இரு தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் அவைத் தலைவராக உள்ள மதுசூதனன், உடல் நலக்குறைவு காரணமாக, பதவியிலிருந்து விலக, விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த இடத்திற்கு, தன் ஆதரவாளர் ஒருவரை கொண்டு வர, இ.பி.எஸ்., முடிவு செய்துள்ளார். பன்னீர் தரப்பு, முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை நியமிக்க, முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில், சமீபத்தில் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களான, கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோருடன், பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று, 1 மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளார்.அவரிடம், செயற்குழு கூட்ட அழைப்பிதழ் கொடுத்து, கூட்டத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரனை, அவைத் தலைவராக நியமித்து, வன்னியர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளை, தன் பக்கம் இழுக்க, பன்னீர் தரப்பு காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. அதேநேரம், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் என, அனைவரையும், தங்கள் பக்கம் இழுக்க, இ.பி.எஸ்., தரப்பினர் காய் நகர்த்தி உள்ளனர். இரு தரப்பினரும் பலத்தை நிருபிக்க, முஸ்தீபு காட்டும் நேரத்தில், சமாதான பேச்சும், ஒருபுறம் நடந்து வருகிறது. - நமது நிருபர் -Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X