இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம் வலியுறுத்தல்

Updated : செப் 28, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (17)
Share
புதுடில்லி : ''இலங்கை தமிழர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அதிகாரப் பரவலை அளிக்கும் அரசியல் சாசன திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனான பேச்சில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.நம் அண்டை நாடான இலங்கையின் அதிபராக, கோத்தபயா ராஜபக்சேவும், பிரதமராக, அவரது மூத்த சகோதரர்
இலங்கை, தமிழர்களுக்கு...அதிகாரப் பகிர்வு! ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி : ''இலங்கை தமிழர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அதிகாரப் பரவலை அளிக்கும் அரசியல் சாசன திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனான பேச்சில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

நம் அண்டை நாடான இலங்கையின் அதிபராக, கோத்தபயா ராஜபக்சேவும், பிரதமராக, அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேவும் உள்ளனர்.கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வென்ற கோத்தபயா, முதல் வெளிநாட்டு பயணமாக, கடந்தாண்டு நவம்பரில், இந்தியா வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சே, இந்தாண்டு துவக்கத்தில், அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார்.சமீபத்தில் நடந்த இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், மகிந்த ராஜபக்சே பெரும் வெற்றியைப் பெற்றார்.


வாழ்த்து



இந்நிலையில், பிரதமராக பதவியேற்ற அவருடன், நம் பிரதமர், நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று பேசினார்.இரு தலைவர்கள் இடையே நடந்த பேச்சு குறித்து, நம் வெளியுறவுத் துறையின் இந்தியப் பெருங்கடல் பிரிவின் இணைச்
செயலர் அமித் நாரங்க் கூறியதாவது:இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்றதற்காக, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு, மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை உட்பட, அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு, இந்தியா அளிக்கும் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். அதில், இலங்கைக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை அவர் தெரிவித்தார்.'இலங்கையில் வலுவான அரசு அமைந்துள்ளதால், இரு தரப்பு உறவுகளில் புதிய உச்சத்தை எட்ட முடியும்.

'கடல் பகுதி பாதுகாப்பு, ராணுவ ஒப்பந்தத்தில், இணைந்து செயல்படுவோம்' என, மோடி குறிப்பிட்டார்.வர்த்தகம் உட்பட பல்வேறு இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச அளவிலான பிரச்னைகள், இரு தலைவர்கள் பேச்சில் முக்கியமாக இடம்பெற்றன. இலங்கையில் புத்த மத வளர்ச்சிக்காக, 110 கோடி ரூபாய் கடன் அளிப்பதாக, மோடி உறுதியளித்து உள்ளார்.இலங்கை வாழ் தமிழர்கள் பிரச்னை குறித்தும், மீனவர் பிரச்னை குறித்தும், இருவரும் விரிவாக விவாதித்தனர். இலங்கை தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்பது தொடர்பாக, 1987ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, இலங்கை பார்லி.,யில், 13வது அரசியல் சாசன திருத்தம் செய்யப்பட்டது. இந்த, 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே, இலங்கை தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஆகும்.இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சம உரிமை மற்றும் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.


மனிதாபிமானம்



அமைதியாக வாழ்வதுடன், உரிய நீதியும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும்.'தமிழர்களின் இந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தின், 13-வது திருத்தத்தை, இலங்கை அரசு விரைவில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்' என, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.'மீனவர் பிரச்னை குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக பேசினர். இரு தரப்பு மக்களின் வாழ்வாதரத்தையும் பாதிக்கும் பிரச்னை என்பதால், இதை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்' என, மோடி வலியுறுத்தினார்.இவ்வாறு, அவர் கூறினார்.


ராஜபக்சே வாக்குறுதி!



பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று நடந்த பேச்சில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாவது:இந்த மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்ததற்கு, என் நன்றிகளை தெரிவிக்கிறேன். நாம் நேருக்கு நேராக சந்தித்துப் பேசாமல் இருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க நல்லுறவு, தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதில், இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், எங்களுக்கு உதவி செய்து, ஒத்துழைப்பு வழங்கிய இந்தியாவுக்கு நன்றி.மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நாங்கள், அனைத்து சமூக மக்களுக்கும், நல்வாழ்வு வாழ தேவையான சூழலை உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


இந்திய துாதர் பெருமிதம்



நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில், வங்கதேசத்துக்கான இந்தியத் துாதர் ரிவா கங்குலி தாஸ் பங்கேற்றார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:இந்தியாவும், வங்கதேசமும், வளர்ச்சிக்கான கூட்டாளிகள். இரு நாடுகள் இடையேயான உறவு, பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதையின் அடிப்படையில் அமைந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு துவங்கியதன், 50வது ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாடுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X