பிச்சை புகினும் உதவுதல் நன்றே: இப்படியும் ஒரு யாசகர்| Dinamalar

பிச்சை புகினும் உதவுதல் நன்றே: இப்படியும் ஒரு யாசகர்

Added : செப் 27, 2020 | கருத்துகள் (1) | |
கொரோனா ஊரடங்கு அனைத்து தரப்பினரையும் பாதித்து விட்டது. ஊரடங்கு தளர்வுகளையடுத்து தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டுள்ளது. ஊரடங்கிலும் அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஏப்., முதல் செப்., வரை 14 முறை ரூ.1.40 லட்சத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணமாக வழங்கியிருக்கிறார்... மும்பையில் பணிபுரிந்த காலத்தில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு
 பிச்சை புகினும்  உதவுதல் நன்றே: இப்படியும்  ஒரு யாசகர்

கொரோனா ஊரடங்கு அனைத்து தரப்பினரையும் பாதித்து விட்டது. ஊரடங்கு தளர்வுகளையடுத்து தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டுள்ளது. ஊரடங்கிலும் அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஏப்., முதல் செப்., வரை 14 முறை ரூ.1.40 லட்சத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணமாக வழங்கியிருக்கிறார்...

மும்பையில் பணிபுரிந்த காலத்தில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறார்... தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போது பள்ளி, கல்லுாரிகளுக்கு சேர்கள், டேபிள்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்... இதுவரை ரூ.6 லட்சம் வரை பள்ளிகளுக்காக மட்டும் வழங்கியிருக்கிறார்...

இந்தளவு உதவ அவர் ஒன்றும் பணக்காரர் இல்லை. வீடு வீடாக பிச்சை எடுத்து தானம் செய்கிறார். கிடைக்கும் பணத்தில் தனது உணவுத்தேவை போக மீதமுள்ளதை சேமித்து மதுரையில் மட்டும் ஆறு மாதங்களில் ரூ.1.40 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி சுதந்திர தின விழா பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் வினய்யிடமிருந்து பெற்றிருக்கிறார் யாசகர் பூல்பாண்டியன் 70.

கலெக்டர் அலுவலக வளாக மரத்தடியில் கலெக்டரிடம் 14வது முறை ரூ.10 ஆயிரத்தை வழங்கி விட்டு, யாரோ வழங்கிய உணவுபொட்டலத்தை பிரித்து சாப்பிட்டு கொண்டிருந்தவருடன் பேசினோம்...

துாத்துக்குடி ஆலங்கிணறு சொந்த ஊரு. நாங்க எட்டு பிள்ளைங்க. மூத்த அண்ணனும், நானும் தான் உயிரோடு இருக்கிறோம். சரியாக படிக்கவில்லை. வயதுக்கு வந்ததும் திருமணமும் நடந்தது. மனைவி பெயர் சரஸ்வதி. முருகவள்ளி, லட்சுமி, கார்த்திக் என மூன்று குழந்தைகள் உள்ளனர். வேலை தேடி மும்பை போனேன். வேலை கிடைக்காமல் கோயில்களில் பிச்சை எடுக்க துவங்கினேன். இதில் கிடைத்த தொகையில் உணவு செலவு போக மீத பணத்தை அங்கு ஒருவரிடம் கொடுத்து வைப்பேன்.

பெரிய தொகையாக சேர்ந்ததும் அதை வாங்கி மரக்கன்றுகள் வாங்கி நடுவது, பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்குவது என செலவிட்டேன். இதனால் எனக்கு மும்பையில் நல்ல பெயர் கிடைத்தது.ஆனால் சில ரவுடிகளுக்கும் சில பிச்சைகாரர்களுக்கும் நான்சேவை செய்வது பிடிக்கவில்லை. இதனால் என்னை தாக்க முயன்றனர். என்னை அறிந்த சிலர் மும்பையில் இருக்க வேண்டாம் என ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

பிச்சை எடுத்து பிறருக்கு உதவுவது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. ஆனால் பணத்தை கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். அது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் மனம் போன போக்கில் ஊர்களுக்கு சென்று பிச்சை எடுத்து உதவி வருகிறேன். குடும்பத்தில் சேர்த்து கொள்ள மறுத்து விட்டனர். இருப்பினும் மும்பையில் இருந்து நான் அனுப்பிய பணத்தில் என் குழந்தைகளுக்கு மனைவியும், உறவினர்களும் திருமணம் செய்து வைத்தனர். நான் யார் வீட்டுக்கும் செல்ல மாட்டேன்.

துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் இருக்கைகள் வாங்க நிதி அளித்தேன்.என் மனைவியை கூட யாரோ சிலர் கொலை செய்ததாக கேள்விபட்டேன். ஆனால் நான் சென்று கூட பார்க்க முடியவில்லை.என்னை பொறுத்தவரை பிச்சை எடுப்பது கேவலமாக தெரிய வில்லை. என் சேவையை அறிந்தவர்கள் எனக்கு ரூ.50, ரூ100 பிச்சை போடுகின்றனர். மார்ச்சில் பிச்சை எடுக்க மதுரை வந்த நிலையில் ஊரடங்கு வந்தது. என்னை பிடித்து ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர். தளர்வுக்கு பிறகு ஏப்., முதல் பிச்சை எடுக்க துவங்கினேன்.

கிடைத்த பணத்தை கலெக்டரிடம் வழங்கினேன். மதுரைக்காரர்கள் பாசக்காரர்களாக உள்ளனர். கொரோனா நிதி கொடுத்தவன் என என்னை பார்த்ததும் பிச்சை போட்டு விடுவர். ஓட்டல்களில் சாப்பாடும் தந்து விடுவர். இதனால் சாப்பாடு செலவும்இல்லை. வழியில் ஏதாவது ஒரு இடம் கிடைத்தால் துாங்கி விடுவேன்.மதுரையை விட்டு போறதுக்கு மனது இல்லை.

இருப்பினும் பொது ரயில் போக்குவரத்து துவங்கியதும் வெளியூர்களுக்கு செல்லலாம் என உள்ளேன். உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உதவ வேண்டும் என்பது தான் ஆசை. நடக்க முடியாமல் போனால் உப்புசத்தியாகிரகம் நடந்த வேதாரண்யத்தில் சென்று தங்கலாம் என உள்ளேன். அங்கு ஒரு காப்பகத்தில் என்னை அழைத்து கொண்டுள்ளனர். அலைபேசியும் வாங்கி கொஞ்ச நாள் வைத்திருந்தேன். ஆனால் ஒரே தொந்தரவு. இதனால் தற்போது அலைபேசி வைத்து கொள்வதும் கிடையாது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X