சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிற்றரசுவின் செயல்பாட்டினால், மதுர வாயல் பகுதி தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவுக்கு பின், மாவட்ட பொறுப்பாளர் பதவியை, மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்பார்த்தனர்.
குற்றச்சாட்டு
இளைஞரணி செயலர் உதயநிதி, மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ., ஆகியோரின் ஆதரவில், இளைஞரணி மாவட்ட அமைப்பாளரான சிற்றரசுக்கு, மாவட்டச் செயலர் பொறுப்பு பதவி கிடைத்தது. சிற்றரசு நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., - கு.க.செல்வம், பா.ஜ.,வில் இணைந்தார். ஜெ.அன்பழகன் மறைவுக்கு பின், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வில் அடங்கிய மதுரவாயல் பகுதி, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க.,வுடன் இணைக்கப்பட்டது.
ஆனால், மதுரவாயல் பகுதி நிர்வாகத்தில் மறைமுகமாக, சிற்றரசு தலையிட்டு, தனக்கு ஆதரவாக, ஒரு கோஷ்டியை வளர்க்கும் வேலையிலும், எதிர்கோஷ்டியினரை பற்றி உதயநிதியிடம் பற்ற வைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மதுரவாயல் தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:சென்னை நகரில், அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய இரு இடங்களும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., எல்லைக்குள் உள்ளன. ஆனால், அறிவாலயம், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., கட்டுப்பாட்டிலும்; கருணாநிதி நினைவிடம், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., கட்டுப்பாட்டிலும் உள்ளன.
கோஷ்டி பூசல்

அறிவாலயத்தில் உள்ள ராட்சத கொடிக் கம்பம் பராமரித்தல் மற்றும் அங்கு நடக்கும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடைபெறும். எனவே, இரண்டு முக்கியமான இடங்களில், தன் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் இல்லையே என்ற ஆதங்கத்தில், மதுரவாயல் பகுதி தி.மு.க., நிர்வாகத்தில், தேவையில்லாமல் தலையிட்டு, சிற்றரசு கோஷ்டி பூசலை வளர்த்து வருகிறார்.
அப்பகுதியில் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்படும் நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என, உதயநிதியிடம் வலியுறுத்தி வருகிறார். ஜெ.அன்பழகன் ஆதரவாளர்களாக இருந்த நிர்வாகிகளுக்கு எதிராகவும், சிற்றரசு செயல்படுகிறார் என்ற அதிருப்தி, கட்சியினரிடம் நிலவுகிறது.
இந்த நிலை நீடித்தால், மதுரவாயல் பகுதி தி.மு.க.,வினர், பா.ஜ.,விற்கு ஓட்டம் பிடித்தாலும் ஆச்சரியமில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE