முதல்வர் வேட்பாளர் சர்ச்சை நீடிப்பு : அ.தி.மு.க., செயற்குழு இன்று கூடுகிறது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் சர்ச்சை நீடிப்பு : அ.தி.மு.க., செயற்குழு இன்று கூடுகிறது

Updated : செப் 28, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (5)
Share
சென்னை:ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற, சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. மே முதல் வாரத்தில், தேர்தல் நடக்க உள்ளது. எனவே, அனைத்துக் கட்சிகளும், தேர்தல் பணிகளைத் துவக்கி உள்ளன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வும்,
ADMK, CM candidate, TN election, முதல்வர் வேட்பாளர், சர்ச்சை நீடிப்பு, அ.தி.மு.க., செயற்குழு இன்று கூடுகிறது

சென்னை:ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற, சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. மே முதல் வாரத்தில், தேர்தல் நடக்க உள்ளது. எனவே, அனைத்துக் கட்சிகளும், தேர்தல் பணிகளைத் துவக்கி உள்ளன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வும், தங்களின் வெற்றிக்கான வியூகங்களை அமைத்துக் கொடுக்க, அரசியல் ஆலோசகர்களை நியமித்துள்ளன.இரு கட்சிகளிலும், தகவல் தொழில் நுட்ப அணிகளை வலுப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. அ.தி.மு.க.,வில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடந்து வரும் நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற, சர்ச்சை எழுந்துள்ளது.


போட்டிமுதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 'முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, இப்போதே முடிவு செய்ய வேண்டும்' என, இ.பி.எஸ்., தரப்பு வலியுறுத்துகிறது.ஓ.பி.எஸ்., தரப்பு, 'முதல்வர் வேட்பாளர் பிரச்னையை பிறகு பார்ப்போம்; முதலில் கட்சியை வழிநடத்த, முன்பே திட்டமிட்டபடி, வழிகாட்டுதல் குழு அமைப்போம்' என்கிறது.

கடந்த, 18ம் தேதி, சென்னையில்,அ.தி.மு.க.,தலைமை அலுவலகத்தில்,அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற, அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், வழிகாட்டிக் குழு அமைக்கும்படி, ஓ.பி.எஸ்.,வலியுறுத்தினார்; அது முடியாது என, இ.பி.எஸ்., மறுத்து விட்டார். அன்று கட்சி அலுவலகம் வந்தபோது, இருவரின் ஆதரவாளர்களும் அவர்களை வாழ்த்தி, போட்டி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால், ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் வெடிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இ.பி.எஸ்., எதிர்ப்பு காரணமாக, எந்த முடிவும் எடுக்கப்படாமலே, அந்தக் கூட்டம் நிறைவடைந்தது.இந்நிலையில், தேர்தல் கமிஷன் விதிகள்படி, ஆண்டுக்கு இரு முறை செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, இன்று செயற்குழு கூட்டம் நடத்த, அன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இ

ன்று காலை, 9:45 மணிக்கு, சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது.கொரோனா பரிசோதனையில், நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டோர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.அவைத் தலைவர் மதுசூதனன், உடல் நலக் குறைவு காரணமாக, பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, புதிய அவைத் தலைவராக, இ.பி.எஸ்., தரப்பு, முன்னாள் அமைச்சர் பொன்னையனை நியமிக்க முடிவு செய்துள்ளது.அதற்கு எதிராக, ஓ.பி.எஸ்., தரப்பு, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை முன்னிறுத்துவதாக, தகவல் வெளியாகி உள்ளது. எனவே, செயற்குழு கூட்டத்தில், இவ்விஷயத்தில் பிரச்னை கிளம்பும் என, தெரிகிறது.அதே நேரத்தில், சில மூத்த அமைச்சர்கள், இரு தரப்புக்கும் இடையில் சமரசம் காணும் முயற்சியில் ஏற்கனவே இறங்கி உள்ளனர்.


முக்கிய முடிவுகள்

'முதல்வர் வேட்பாளர், வழிகாட்டிக் குழு, அவைத் தலைவர் தேர்வு போன்றவற்றை பின்னர் பேசி முடிவு செய்யலாம்.'இன்றைய கூட்டத்தில், தேர்தல் பணி, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து, முதல்வர், துணை முதல்வர், துணை ஒருங்கிணைப்பாளர்களை மட்டும் பேச அனுமதிக்கலாம்' என, அவர்கள் சமரசம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில், கட்சி பொதுக்குழுவை கூட்டி, அதில், அவைத் தலைவர் தேர்வு; முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; வழிகாட்டுக் குழு போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்றும், அவர்கள் இரு தரப்புக்கும் யோசனை தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில், இன்றைய செயற்குழு அமைதியாக முடியுமா அல்லது ஆதரவாளர்கள் பேச்சால் அனல் பறக்கும் விவாதம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது.


எந்த பிரச்னையும் இல்லை:அமைச்சர் ஜெயகுமார் உறுதி''அ.தி.மு.க., செயற்குழுவில், நீங்கள் எதிர்பார்ப்பது போல எந்த பிரச்னையும் இருக்காது,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:

தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, ஆண்டுதோறும் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்படுவது வழக்கம்; அதுபோல கூட்டப்படுகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது போல, எந்த பிரச்னையும் இல்லை.அ.தி.மு.க., தேர்தலுக்காக மட்டுமல்ல, எப்போதும் மக்களோடு சேர்ந்து தொண்டு செய்யும் இயக்கம். வரும் தேர்தலில், அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும்.

பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள வேண்டாம்.அவைத் தலைவர் மதுசூதனனை முதலில், முதல்வர் பார்த்தார்; தற்போது, துணை முதல்வர் பார்த்துள்ளார். இதில், அரசியல் உள்நோக்கம் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து, தேர்தலை சந்திப்போம்; வெற்றி பெறுவோம். ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருக்குமா என்பதை, கட்சி முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X