பாட்னா: ''பீஹாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்குவோம்,'' என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தெரிவித்தார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளும், லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில், காங்., மற்றும் கம்யூ., கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனாதள தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், கட்சியின் முதல்வர் வேட்பாளருளான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக, முதல்வர் நிதிஷ் குமார் கூறுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று, நாங்கள் ஆட்சியமைத்தால் உடனடியாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை் வழங்குவோம். இது, போலி வாக்குறுதியல்ல. நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், பீஹார் தேர்தல் பாதுகாப்பு பணியில், 30 ஆயிரம் துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.