காஞ்சிபுரம்: விவசாயி எனக்கூறும் முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியில் தான் விவசாயிகளின் உரிமை பறிபோகின்றன என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்தின. காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி களத்துமேடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: அரசு விதிமுறைகளை பின்பற்றி போராட்டம் நடத்தப்படுகிறது.
ஏழை தாயின் மகன் எனக்கூறிக்கொள்ளும் பிரதமர், ஏராளமான இந்தியர்களை ஏழைகளாக்கி கொண்டிருக்கிறார். தான் விவசாயி எனக்கூறும் முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியில் விவசாயிகள் உரிமை பறிபோகின்றன. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அதிமுக ஆதரிக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமரும், முதல்வரும் போட்டி போட்டு கொண்டு செய்கின்றனர்.
வேளாண் சட்டங்களை பா.ஜ., கூட்டணி கட்சிகளே எதிர்க்கின்றன. இந்த சட்டங்களை ஏற்க மறுத்து பா.ஜ., கூட்டணியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகியுள்ளார். விவசாயிகள் நலனை பாதுகாக்கும் என்பதால், பஞ்சாபில் கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகியுள்ளது. மக்களுக்கு எதிரான சட்டங்களை துணிச்சலாக தி.மு.க., எதிர்க்கும்.
ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், டில்லி, கர்நாடகாவில் போராட்டம் நடக்கிறது. ஹரியானாவில் தண்டவாளத்தில் படுத்துதூங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.போராட்டத்தில் ஈடுபடுவோர்களை கைது செய்ய மாட்டோம் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. உ.பி., டில்லிக்கு, விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலம் செல்கின்றனர். விவசாயி சட்டத்தை எதிர்த்து கேரளா நீதிமன்றம் செல்ல உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., நீதிமன்றம் செல்ல வேண்டும். இல்லையென்றால், மக்கள் சார்பில் திமுக செல்லும்.

வேளாண்துறை அதிகாரிகளை மிரட்டி பேட்டி கொடுக்க வைக்கிறார்கள். விவசாயிகள் என சொல்லிஎமாற்றும் விஷவாயுதான் இபிஎஸ்.,விவசாயிகள் துன்பங்களுக்கு துணை நிற்பவன்தான், இந்த ஸ்டாலின், காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முன்வரும் போது, அதை தட்டி கேட்க துணிச்சல் உள்ளதா? அதிமுகவுக்கு 8 வழிச்சாலை வரும் நேரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், தன்னை விவசாயி என சொல்லும் இபிஎஸ் அவர்களை அழைத்து பேசி உள்ளாரா? குடிமராமத்து திட்டம் மூலம் கொள்ளையடிக்கும் நீங்கள் தான் விவசாயியா? இந்த போலி விவசாயியை மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்களை சந்தித்த ஸ்டாலின், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.