தமிழகத்திற்கு ரூ.23,763 கோடி வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க.,தீர்மானம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரூ.23,763 கோடி வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க.,தீர்மானம்

Updated : செப் 30, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (8)
Share
சென்னை : 'ஜி.எஸ்.டி., நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானிய நிலுவை தொகை, 23 ஆயிரத்து, 763 கோடி ரூபாயை, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கூட்டத்தில்,15 தீர்மானங்கள்
 தமிழகத்திற்கு ரூ.23,763 கோடி வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க., தீர்மானம்

சென்னை : 'ஜி.எஸ்.டி., நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானிய நிலுவை தொகை, 23 ஆயிரத்து, 763 கோடி ரூபாயை, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கூட்டத்தில்,15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் முக்கியமானவை:

* கொரோனா தொற்று காலத்திலும், மக்களின் துயர் துடைக்க, அரும்பணியாற்றி வரும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கு பாராட்டு
* நாட்டிற்கே முன்னோடியாக, கொரோனா நோய் எதிர்ப்பு பணிகள், மருத்துவ பணிகள், மறுவாழ்வு பணிகள் மற்றும், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வரும், தமிழக அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றி
* கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு, மத்திய அரசு போதிய நிதியை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும்
* தமிழக அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள, ஜி.எஸ்.டி., நிலுவை தொகை, 4,073 கோடி ரூபாய்; திட்டங்கள் சார்ந்து அளிக்கப்பட வேண்டிய நிலுவை தொகை, 16,505.32 கோடி ரூபாய்; மானியங்கள் வகையில், 3,185.04 கோடி ரூபாய் என, மொத்தம், 23 ஆயிரத்து, 763.36 கோடி ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்


இருமொழி கொள்கை* அனைத்து மொழிகளையும் மதிக்கும் தமிழகம், என்றைக்கும் இரு மொழி கொள்கையை, உயிர் மூச்சாக கொண்டிருக்கும்
* மத்திய அரசு, தமிழக அரசின் வாதங்களின் வலிமையை புரிந்து, 'நீட்' தேர்வை கைவிட வேண்டும். 'நீட்' விவகாரத்தில், உண்மைகளை மறைத்து விட்டு, மக்களிடம் கபட நாடகம் ஆடி வரும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை, இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது
* மருத்துவ சேர்க்கையில், அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி இருக்கும், முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி
* இந்திய கலாசாரம், பண்பாடு குறித்து, மறு ஆய்வு செய்வதற்கான குழுவில், தமிழகத்தை சேர்ந்த அறிஞர்களுக்கு, இடமளிக்க வேண்டும்


கச்சத்தீவு* கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இலங்கை தமிழர் நலன் காக்கப்பட வேண்டும். இதில், மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்
* அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி, தமிழகத்தில் மீண்டும், எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆகியோரின் ஆட்சி மலர்ந்திட, அயராது உழைப்போம்; கட்சிக்கு வெற்றி சேர்ப்போம். இவ்வாறு, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


முதல்வருக்கு பாராட்டுஇவற்றில், ஆறு தீர்மானங்களில், முதல்வருக்கு மட்டும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஜெ., இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றி அமைத்ததற்கு, நன்றி தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. கட்சியினர், 284 பேர்; முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உட்பட, 16 பிரபலங்கள் மற்றும் கொரோனா நோயால் இறந்தவர்களுக்கும், இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
காங்., - எம்.பி., வசந்தகுமார், ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் காளன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் லட்சுமணன் ஆகியோர் மறைவுக்கும், இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., அன்பழகன் பெயர் இடம் பெறவில்லை.


வரவேற்பில் அசத்தல்* அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்து உள்ள சாலையில், கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது
* துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, நான்கு இடங்களில், கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அவரது ஆதரவாளர்கள், அவருக்கு மலர் மாலை, மலர் கிரீடம் அணிவித்து, வெள்ளி வீரவாள் பரிசாக வழங்கினர்
* முதல்வருக்கு, கட்சி அலுவலகம் முன், அவரது ஆதரவாளர்கள் பூச்செண்டு கொடுத்து, வரவேற்பு அளித்தனர். முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவருக்கும், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இருவர் கார் மீதும், ஆதரவாளர்கள் மலர்களை துாவினர்.
* ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், 'அம்மா தந்த மும்முறை முதல்வரே வருக' என்ற பேனரை பிடித்திருந்தனர். இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், 'எங்கள் சாமானிய முதல்வரே' என்ற பேனரை பிடித்திருந்தனர்.
* கூட்டம், காலை, 10:15 மணிக்கு துவங்கி, மதியம், 2:45 மணிக்கு முடிந்தது.
* அழைப்பிதழ் வைத்திருந்தோர் மட்டும், கட்சி அலுவலகத்திற்குள், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.
* அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை நிர்வாகிகள், முதல் தளத்தில் உள்ள அரங்கிலும், மாவட்ட செயலர்கள் அலுவலகத்தின் பின்புறத்திலும், மகளிர், பிற மாநில செயலர்கள், தரைதளத்தில் வலதுபுறத்திலும் அமர வைக்கப்பட்டிருந்தனர். தரைதளத்தில் இருந்தவர்கள், செயற்குழு கூட்டத்தை காண, எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டிருந்தது
* கூட்டத்திற்கு வந்த செயற்குழு உறுப்பினர்களுக்கு, சானிடைசர், முகக்கவசம், கையுறை அடங்கிய பை வழங்கப்பட்டது* கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், ஆவின் மோர், போண்டா போன்றவை வழங்கப்பட்டன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X