முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே வெடித்த மோதலால், அ.தி.மு.க.,வில் கோஷ்டி கானம் ஒலிக்கத் துவங்கி உள்ளது.
சென்னையில், நேற்று முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்ற அரசு நிகழ்ச்சியை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் புறக்கணித்தார். அதேநேரத்தில், தன் வீட்டில் ஆதரவாளர்களை கூட்டி ரகசிய ஆலோசனை நடத்தினார். அதற்கு போட்டியாக, முதல்வர் வீட்டில், மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் துணை முதல்வர் இடையே, திடீர் மோதல் வெடித்துள்ளது. சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சியினர் முன்னிலையில், இருவரும் பகிரங்கமாக மோதிக் கொண்டனர்.
கடும் அதிர்ச்சி
கட்சியினர் மத்தியிலான பூசலை தீர்த்து வைக்க வேண்டிய இருவரும், நேரடி மோதலில் இறங்கியதால், கட்சி வட்டாரம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.தற்காலிகமாக, இருவரையும் சமாதானப்படுத்திய, மூத்த நிர்வாகிகள், இருவருக்கும் இடையே பேச்சு நடத்தி, சுமூக தீர்வு கண்ட பின், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு, அக்., 7ம் தேதி வரை அவகாசம் உள்ளது.இச்சூழலில், அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், முதல்வருக்கு ஆதரவாக பேசிய போது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமைதி காத்தனர். அதே நேரத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேசியபோது மட்டும், அவர்களுக்கு எதிராக, முதல்வர் தரப்பினர் கூச்சலிட்டனர்.
இதனால், வெறுப்படைந்த பன்னீர்செல்வம் நேற்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை. முதல்வரை சந்திப்பதை விரும்பாமல், தலைமைச் செயலகத்தில் நடந்த, முதல்வர் பங்கேற்ற, அரசு நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார்; தேனி செல்லவும் திட்டமிட்டார்.இதை அறிந்ததும், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர், அவரது வீட்டிற்கு சென்று, அவருடன் ஆலோசனை நடத்தினர். பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான, முன்னாள் எம்.பி., மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிராபகர் மற்றும் நிர்வாகிகளும் கூடினர்.
பயணம் ரத்து
சமரச முயற்சியில் ஈடுபட்ட நிர்வாகிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஓ.பி.எஸ்.,சிடம் ஆலோசித்துள்ளனர்.இந்த சந்திப்பு நடக்கும் நேரத்தில், திடீரென முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான மணிகண்டனும், ஓ.பி.எஸ்., வீட்டுக்கு வந்து, பேச்சில் பங்கேற்றார். இதற்கிடையில், நேற்று மாலை, மூத்த அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து, தனி ஆலோசனை நடத்தினர்.
பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த சந்திப்பு; அதில் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து, முதல்வருடன் அவர்கள் விவாதித்தனர்.இரு தரப்பினரும், தனித்தனியாக, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதால், மோதல் முடிவுக்கு வருமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையில், யாரும் சமரச முயற்சியை, இன்னும் துவக்கவில்லை. அதனால், ஆளும் கட்சியில் ஆரம்பமாகி உள்ள மோதல், மேலும் சில நாட்கள் நீடிக்கும் என, தெரிகிறது. ஆதரவாளர்கள் சந்திப்புக்கு பின், பன்னீர்செல்வம் தன் தேனி பயணத்தை ரத்து செய்தார். எனவே, இன்றும் ஆலோசனை தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னீர்செல்வத்துடன் நடத்திய பேச்சு குறித்து, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியதாவது:
அ.தி.மு.க., மீண்டும் வலிமையுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே, என் விருப்பம். அதற்கு உறுதுணையாக இருப்பேன். இருவருக்கும் ஆதரவாக இருப்பேன். எந்த குழப்பமும் இல்லை. மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். செயற்குழுவில் நடந்த காரசாரமான விவாதம், கட்சிக்கு விரோதமானதல்ல; கட்சி வளர்ச்சிக்குரிய விவாதம்.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், ''கட்சி பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, ஒருங்கிணைப்பாளரை சந்தித்து பேசினோம். இது, தொடர்ச்சியான கட்சியின் நிகழ்வு; வேறு எதுவும் இல்லை,'' என, சமாளித்தார்.
பன்னீர்செல்வம் புறக்கணிப்பு!
முதல்வர் தலைமையில் நடக்கும், கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்பது வழக்கம். முதல்வருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சென்னையில் நேற்று நடந்த, கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை, பன்னீர்செல்வம் புறக்கணித்தார். நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE