சென்னை: துணை முதல்வர் பன்னீர்செல்வம், இரண்டாவது நாளாக இன்றும், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், நத்தம் விஸ்வநாதனும் கலந்து கொண்டார்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் துணை முதல்வர் இடையே, திடீர் மோதல் வெடித்துள்ளது. சென்னையில், செப்.,28 ல் நடந்த, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சியினர் முன்னிலையில், இருவரும் பகிரங்கமாக மோதிக் கொண்டனர்.
கட்சியினர் மத்தியிலான பூசலை தீர்த்து வைக்க வேண்டிய இருவரும், நேரடி மோதலில் இறங்கியதால், கட்சி வட்டாரம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.தற்காலிகமாக, இருவரையும் சமாதானப்படுத்திய, மூத்த நிர்வாகிகள், இருவருக்கும் இடையே பேச்சு நடத்தி, சுமூக தீர்வு கண்ட பின், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு, அக்., 7ம் தேதி வரை அவகாசம் உள்ளது. இச்சூழலில், அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், முதல்வருக்கு ஆதரவாக பேசிய போது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமைதி காத்தனர். அதே நேரத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேசியபோது மட்டும், அவர்களுக்கு எதிராக, முதல்வர் தரப்பினர் கூச்சலிட்டனர்.
இதனால், வெறுப்படைந்த பன்னீர்செல்வம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியை புறக்கணித்தார். தேனி செல்ல திட்டமிட்டார். இதனையறிந்த துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர், அவரது வீட்டிற்கு சென்று, அவருடன் ஆலோசனை நடத்தினர். பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான, முன்னாள் எம்.பி., மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிராபகர் மற்றும் நிர்வாகிகளும் கூடினர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். அதேநேரத்தில் நேற்று மாலை, முதல்வர் பழனிசாமியை, மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினர். பன்னீர்செல்வம், பழனிசாமியை அமைச்சர் உதயக்குமார் அடுத்தடுத்து இரண்டு முறை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பன்னீர்செல்வம், 2வது நாளாக இன்றும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதனும் கலந்து கொண்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE