புதுடில்லி: ஹிமாச்சலப் பிரதேசத்தில், மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கச் சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, நாளை திறந்து வைக்கிறார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில், நெடுஞ்சாலையில், சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பயணம் செல்லும் வகையில், இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன், பனிகாலங்களில், ஆறு மாதங்களுக்கு இந்த நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டிருக்கும். அதை தவிர்க்கும் வகையில், இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 9.02 கி.மீ., துாரத்துக்கு கடல் மட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த நெடுஞ்சாலைசுரங்கம் அமைந்துள்ளது.

உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் நீளமான சுரங்கமாக இது விளங்குகிறது.நம் ராணுவத்தின், பி.ஆர்.ஓ., எனப்படும், எல்லை சாலை நிறுவனம், மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த சுரங்கத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளது. மொத்தம், 30 அடி அகலத்துடன், 17 அடி உயரத்துடன், இரண்டு வழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுரங்கத்தால், மணாலி மற்றும் லே இடையேயான பயண துாரம், 46 கி.மீ., குறைகிறது. பயண நேரமும், ஐந்து மணி நேரம் குறையும். அவசர காலத்தில், எல்லைக்கு நம் ராணுவம் செல்வதற்கும் இந்த சுரங்கம் மிகுந்த உதவியாக இருக்கும்.
பா.ஜ.,வைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் பிரதமர், வாஜ்பாய் ஆட்சி யின் போது, 2000ல் இந்த சுரங்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அவரது நினைவாக இந்த சுரங்கத்துக்கு அடல் என பெயரிடப்பட்டுள்ளது.நாளை நடைபெறும் விழாவில், இந்த சுரங்கத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக, பிரதமர் அலுவலகம்தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE