ஆமதாபாத்: 'ஐ.என்.எஸ்., விராட்' போர்க்கப்பலை, அருங்காட்சியகமாக மாற்ற ஆட்சேபனை இல்லை என, ராணுவ அமைச்சகத்திடம் இருந்து சான்றிதழ் பெற்று வந்தால், அதை மறு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக, அக்கப்பலை ஏலத்தில் எடுத்த மும்பை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டன் ராணுவத்தில், 1959 - 1984 வரை சேவையாற்றிய, 'எச்.எம்.எஸ்., ஹர்ம்ஸ்' என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், 25 ஆண்டுகளுக்கு பின், படையில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து, நம் ராணுவ அமைச்சகம் இக்கப்பலை வாங்கி, ஐ.என்.எஸ்., விராட் என்ற பெயரில், 1987ல், நம் கடற்படையில் இணைத்தது. நம் படையில், 30 ஆண்டுகள் சேவையாற்றிய இப்போர்க்கப்பல், 2017ல், படையில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீராம் குழுமம் என்ற நிறுவனம், விராட் போர்க் கப்பலை, 38.54 கோடி ரூபாய்க்கு சமீபத்தில் ஏலத்தில் எடுத்தது.

கப்பலை தனியாக பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. எனவே, மும்பை கடற்படை தளத்தில் இருந்து, குஜராத்தின், அலங் கப்பல் உடைக்கும் துறைமுகத்துக்கு, விராட் கப்பல், சமீபத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.இந்நிலையில், நம் கடற்படையின் பாரம்பரிய சொத்தான விராட்டை, அருங்காட்சியகமாக மாற்ற, மும்பையைச் சேர்ந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. விராட் கப்பலை மறு விற்பனை செய்ய, ஸ்ரீராம் குழுமம், 100 கோடி ரூபாய் விலை நிர்ணயித்தது. அதைச் செலுத்த, மும்பை நிறுவனம் ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், 'கப்பலை மறுவிற்பனை செய்ய ஆட்சேபனை இல்லை என, ராணுவ அமைச்சகம் சான்று அளித்தால், அதை விற்பனை செய்யத் தயார்' என, ஸ்ரீராம் குழுமத் தலைவர் முகேஷ் படேல் தெரிவித்து உள்ளார்.''இதற்காக, ஒரு வாரம் வரை காத்திருக்க தயார். அதற்குள் சான்று பெறவில்லை எனில், கப்பலை பிரித்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை,'' என, அவர் தெரிவித்தார்.