பிறந்து, 70வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும், 'தினமலர்' நாளிதழை நிறுவிய டி.வி.ராமசுப்பையருக்கு, இன்று, 112வது பிறந்த நாள். டி.வி.ஆர்., என அன்புடன் அழைக்கப்படும் அவர், 'தினமலர்' நாளிதழை, 1951ல் உருவாக்கினார்.
1984ல் அமரத்துவம் அடைந்தார். அந்த, 33 ஆண்டுகளில், மக்கள் தொண்டு, நீதி, நேர்மை, துணிச்சல், நடுநிலைமை என்ற நீரூற்றி அவர் வளர்த்த, 'தினமலர்' எனும் ஆலமரம் விழுது பரப்பி, அதே பண்போடு, அதே லட்சிய உணர்வோடு, 70ம் ஆண்டை தொட்டு, வானளாவி நிற்கிறது.சுதந்திர போராட்ட காலத்தில் துவங்கிய பத்திரிகைகளுக்கு எல்லாம் ஒரே லட்சியம், இந்திய விடுதலை என்பது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், பத்திரிகை துவங்கிய, டி.வி.ஆர்., வர்த்தக நோக்கத்தில் நாளிதழை துவக்கவில்லை. அப்படி, லாப நோக்கில்லாமல், நாளிதழ் துவங்கும் அளவுக்கு அவர் பணக்காரர் அல்ல; விவசாய நிலங்கள் வைத்திருந்த, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவருக்குள் இருந்த லட்சியம் தான், பத்திரிகை துவங்கும் பாதையில் அவரை திருப்பி விட்டது.
தனி ஆளாய்
பத்திரிகை துவங்கும் முன், 'குமரி மாவட்டத்தில், கட்டாயக் கல்வி திட்டம் வேண்டும்; ஜாதி வேறுபாடுகள் ஒழிய வேண்டும்; தாழ்த்தப்பட்டோருக்கு உரிமைகள் வேண்டும்; குடிநீர், சாலை வசதிகள் வேண்டும்' என, அரசியல் ஆதரவு ஏது மின்றி தனி ஆளாய் போராடினார். அந்த நேரத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த, அன்றைய நாஞ்சில் நாடு, இன்றைய குமரி மாவட்டம், மலையாளம் பேசும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்தது.
அரசியல் ஆதரவு
அப்போது, நாஞ்சில் நாட்டை, தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டம் தீவிரமானது. ஆனால், பிற பத்திரிகைகள் இதை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த போராட்டம், திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியாளர்கள் கவனத்திற்கு எட்டவே இல்லை. அப்போது தான், டி.வி.ஆர்., ஒரு முடிவை எடுத்தார். எதிரியின் கோட்டைக்குள் சென்று அமர்ந்து, எழுத்தால் யுத்தம் நடத்துவது என்ற துணிச்சல் முடிவை எடுத்தார். அதாவது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில், மலையாள மண்ணில், தமிழ் பத்திரிகை துவங்குவது என முடிவு செய்தார்.

திருவனந்தபுரத்தில், 'தினமலர்' துவங்கியதும், 'நாஞ்சில் நாட்டை தமிழகத்தோடு இணைக்க வேண்டும்' என, பக்கம் பக்கமாய் எழுதி, அதில் வென்றார். அரசியல் ஆதரவின்றி, சமூக மாற்றத்திற்கு முயன்ற, டி.வி.ஆருக்கு அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், தினமலர் என்ற ஆயுதம் மூலம் போராடிய போது, சமூக மாற்றத்திற்கான அரசியல் ஆதரவு, டி.வி.ஆருக்கு கிடைத்ததை கண்கூடாக உணர்ந்தார். எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு, மக்கள் சேவைக்கு, பத்திரிகை மூலம் தொண்டாற்ற முடியும் என்பது புரிந்து, களத்தில் குதித்தார்.
நாஞ்சில் நாடு, தாய் தமிழகத்தோடு இணைந்ததும், தன் நோக்கம் நிறைவேறிய திருப்தியில், நாளிதழை, திருவனந்தபுரத்தில் இருந்து, தமிழகத்தின் திருநெல்வேலிக்கு மாற்றினார்.பின், நாட்டின் முன்னேற்றத்திற்காக, சமூக மாற்றத்திற்காக, உள்ளூர் வளர்ச்சிக்காக செய்திகளை உருவாக்கினார்.
வெறும் கொலை, கொள்ளை, விபத்து, அரசின் உத்தரவுகள், அரசியல்வாதிகளின் அறிக்கைகள் என்ற வட்டத்திற்குள், பத்திரிகை செய்திகள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், முதன்முதலாய், மக்களின் தேவைக்காக செய்திகள் தந்தார்.குடிநீர், சாலை, தெருவிளக்கு, மருத்துவமனை, சுகாதாரம், போக்குவரத்து என, அடிப்படை தேவைகளுக்காக எழுதினார். 'மக்கள் படிப்பறிவு பெற, பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகங்கள் வேண்டும்' என, எழுதினார்.ஒரு ஊருக்கு குடிநீர் தேவை என்றால், 'இந்த ஊருக்கு நிரந்தர குடிநீர் திட்டம் வேண்டும்; அதற்கு இது தான் தீர்வு' என்பதை, தொலைநோக்கு பார்வையுடன் எழுதி, ஆட்சியாளர்களின் வேலையை எளிதாக்கினார்.
வளர்ச்சிக்கான இதழியல்
தங்களின் தேவைகளுக்காக முதன் முதலாக ஒரு நாளிதழ் கவலைப்பட்டு, செய்திகளால் சேவை செய்கிறது என்பதை உணர்ந்த வாசகர்கள், 'தினமலர்' நாளிதழை பெரும் ஆதரவோடு அரவணைத்தனர். 'நாட்டின் வளர்ச்சிக்காக இதழியல்' என்ற கோட்பாட்டில், டி.வி.ஆர்., வென்றார். இன்று, குமரி முதல் சென்னை வரை, தமிழகத்தில் உருவாகி இருக்கும் பல வளர்ச்சி திட்டங்கள், அரசின் கட்டமைப்புகள், சாலை வசதிகள், குடிநீர் திட்டங்களில், 'தினமலர்' நாளிதழ் வெளியிட்ட செய்தியின் பங்களிப்பும் இருக்கும். 'தினமலர்' வழிகாட்டிய திட்டங்களாகவும் அவை இருக்கும்.
நாஞ்சில் நாடு, தமிழகத்தோடு இணைந்த போது, அதை திருநெல்வேலி மாவட்டத்தோடு இணைக்க தான் முடிவு செய்திருந்தனர். ஆனால், டி.வி.ஆர்., 'நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை வேறு. அதுபோல, இந்த பகுதி மக்களின் தேவைகள், பிரச்னைகள் வேறு விதமானவை. எனவே, தனி மாவட்டம் ஏற்பட்டால் தான் நல்லது' என, எழுதினார். 'குமரி மாவட்டம் உருவாக, டி.வி.ஆரே காரணம்' என, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் கூறியிருக்கிறார்.
புதிய மாவட்டங்கள்
மதுரையில் இருந்து திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்கள், திருநெல்வேலியில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என்றும் எழுதியவர், டி.வி.ஆர்.,'இதன் பலன் இப்போது தெரியாது; 25 ஆண்டுகளுக்கு பின் தெரியும்' என அப்போதே, தொலைநோக்கோடு சொன்னார். டி.வி.ஆர்., வகுத்த லட்சியம், கொள்கை, கோட்பாட்டின்படி, 'தினமலர்' வெற்றி பயணம் இப்போதும் தொடர்கிறது. இன்றும் நிர்வாக வசதிகளுக்கு, புதிய மாவட்டங்கள் உருவாக, 'தினமலர்' குரல் கொடுத்து வருகிறது.சமீபத்தில், ஆந்திராவில் மூன்று தலைநகர் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, 'தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும்' என்ற தொலைநோக்குடன், 'தினமலர்' எழுதி வருவது கவனிக்கத்தக்கது.
மதுரையில், 'எய்ம்ஸ்' உயர் சிகிச்சை மருத்துவமனை அமையும் என, மத்திய அரசு அறிவித்த போது, அதற்கு போராடியவர்கள், 'தினமலர்' எழுதிய செய்திகளை நினைவுகூர்ந்து, 'இங்கு எய்ம்ஸ் அமைய, 'தினமலர்' நாளிதழே காரணம்' என்றனர்.
வாசகர் சேவை
சில வாரங்களுக்கு முன், திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டியில், தன் வாழ்வின் ஆதாரமாக இருந்த பசு, சாலையில் வாகனம் மோதி இறந்ததை அறிந்து, கதறி அழுத மூதாட்டியின் படம், 'தினமலர்' நாளிதழில் வெளியானது. 'பசு இறந்தது' என்ற செய்தியை தருவது, 'தினமலர்' நோக்கமல்ல. அந்த மூதாட்டியின் அன்றாட வாழ்விற்கு யாராவது உதவ வேண்டும் என்ற மனிதநேயமே, அந்த செய்திக்கான நோக்கம். எதிர்பார்த்தது போலவே, அந்த மூதாட்டிக்கு, கால்நடை அமைச்சரே பசு ஒன்றை தந்தார்; ஏராளமான வாசகர்கள் நிதி உதவியும் செய்தனர். இப்படி, வாசகர்களின் தனிப்பட்ட தேவைக்கு, முன்னேற்றத்திற்கு செய்திகள் வழியே, 'தினமலர்' துாண்டுகோலாக அமைந்த நிகழ்வுகள் ஏராளம். வாசகர்களின் சுக, துக்கங்களில், கொண்டாட்டங்களில், அறிவார்ந்த வளர்ச்சியில், 'தினமலர்' ஒரு அங்கமாகவே இடம் பெற்றிருக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மீது வாசகர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையே, அதன் பெரும் சொத்து. அதன் நடுநிலைமை, சார்பற்ற தன்மையே இதற்கு காரணம். 'தினமலர்' சில நேரங்களில் விமர்சிக்கப்படுவதற்கும் இதுவே காரணம்.'உண்மையின் உரைகல்' என உரக்கச் சொல்லும் துணிச்சல், 'தினமலர்' நாளிதழுக்கு இருக்கிறது. அந்த உயிர்துடிப்புடன் வாசகர்கள் வீட்டு வாசலில், 'தினமலர்' பல நுாற்றாண்டுகள் கடந்தும், மலர்ந்து கொண்டே இருக்கும்.
ஜி.வி.ரமேஷ் குமார், பத்திரிகையாளர் ,
தொடர்புக்கு: இ -மெயில்: rameshkumargv@dinamalar.in