லக்னோ: உ.பி., மாநிலம் ஹத்ராஸ் கிராமத்திற்கு செல்ல முயன்ற திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரீக் ஓ பிரையன் உள்ளிட்டடோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் டெப்ரிக் ஓ பிரையன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண், டில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பெண் உடலை, போலீசார் ஹத்ராசுக்கு இரவோடு இரவாக கொண்டு சென்று போலீசார் தகனம் செய்தனர்.

அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து நடந்து செல்ல முயன்ற ராகுலை தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் கீழே விழுந்தார். அதன்பின்னர் ராகுல், பிரியங்காவை கைது செய்து அழைத்து சென்று, சில மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரீக் ஓ பிரையன் தலைமையில் காகோலி கோஷ், தஸ்திதார், பிரதிமா மோண்டல் உள்ளிட்டோர், ஹர்தாஸூக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்றனர். ஆனால், வழியில் எம்.பி.,க்கள் குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, டெரீக் ஓ பிரையனுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிராமத்தை நோக்கி செல்ல முயன்ற பெண் எம்.பி., பிரதிமா மண்டலை சிலர் தடுத்து நிறுத்த முயன்றனர். அவரது தோள்பட்டையையும் பிடித்து நிறுத்த முயன்றனர்.

அதனை தடுக்க முயன்ற டெரீக் ஓ பிரையன் சென்ற போது, கீழே தள்ளிவிடப்பட்டார். போலீசார் நடந்து கொண்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் எம்.பி.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.