திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில், தடையை மீறி, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
''வேளாண் சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்,'' என, அறிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறுவதாக இருந்த, கிராம சபை கூட்டம், நேற்று ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், ஜமீன் கொரட்டூர் ஊராட்சிக்கு
உட்பட்ட புதுச்சத்திரம் கிராமத்தில், நேற்று தடையை மீறி, கிராம சபை கூட்டம் நடந்தது.
பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஸ்டாலின்
பங்கேற்றார். முன்னதாக, காந்தி உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். பின், பொது மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, ஸ்டாலின் பேசியதாவது:மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வகையில், கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என, கோரிக்கை வைத்தேன். இதையறிந்த, முதல்வர் பழனிசாமி., இரவோடு இரவாக, கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தார்.இலவச மின்சாரம், வங்கிகளில் கடன்கள் தள்ளுபடி போன்ற பல்வேறு உதவிகள், விவசாயிகளுக்கு, தி.மு.க., ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டன. தற்போது வந்துள்ள வேளாண்
சட்டத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். மத்திய அரசு, வேளாண் சட்டத்தை வாபஸ் பெறும் வரை, தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.இவ்வாறு, அவர்
பேசினார்.
அதை தொடர்ந்து, தீர்மானங்களை வாசித்து, பொது மக்களிடம் ஆதரவு தரும்படி கேட்டார். பொது மக்களும் தங்களது கைகளை உயர்த்தி, ஆதரவு தெரிவித்தனர்.
ஹிந்தியில் புதிர்போட்டி
ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி, 150வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில்,3ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஹிந்தியில் இணைய வழி புதிர்போட்டி நடத்துவது கண்டனத்துக்குரியது. காந்தியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய மக்கள் பணிகள், வாழ்க்கையோடு இணைந்த அவரது
கருத்துக்கள் ஆகியவற்றில் நடைபெறும் போட்டிக்கு, தமிழக மாணவர்களுக்கு, ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தமிழ் மொழியில் கேள்வித்தாள் இல்லை. இரு மொழி கொள்கையிலிருந்து, பின் வாங்கி, பதவி சுகத்தை அனுபவிக்கும் எஞ்சிய நாட்களில், ஹிந்தியை தமிழகத்தில் புகுத்தி, மும்மொழி திட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதை, முதல்வர் நிறுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், 'மகாத்மா காந்தி, 150வது ஆண்டு விழா போட்டிகளை, தமிழிலும் நடத்து வதற்கு, மத்திய அரசு முன் வர வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசும்
வலியுறுத்தியுள்ளார்.
300 பேர் மீது வழக்கு!
புதுச்சத்திரம் பகுதியில், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனுமதியின்றி கிராம சபை கூட்டம் நடத்தியதாக, ஸ்டாலின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட
செயலர் நாசர், எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், ஜமீன் கொரட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தபாபு, பூந்தமல்லி ஒன்றிய செயலர் ஜெயகுமார் உட்பட, 300
பேர் மீது, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கனிமொழி மரியாதை
மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை ஒட்டி, துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும்,
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.