வாஷிங்டன் :அமெரிக்காவில் 'எச் - 1பி விசா' வழங்க அதிபர் டிரம்ப் விதித்த தடைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி பணியாற்றுவதற்காக எச் - 1பி என்ற விசா வழங்கப் படுகிறது. கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர்.
உத்தரவு
இதையடுத்து அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச் -- 1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதி வரை தடை விதித்து அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.அமெரிக்காவில் இந்தியர்கள் தான் அதிகமாக இந்த விசாவை பயன்படுத்தி பணியாற்றுகின்றனர். இதனால் அவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது
இந்த தடையால் அமெரிக்காவில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தடையை ரத்து செய்யக்கோரி பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் கலிபோர்னியா மாகாண வடக்கு மாவட்ட பெடரல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெப்ரிச வொயிட் எச் - 1பி விசா வழங்க விதிக்கப்பட்டிருந்த தடைக்கு, தடை விதித்து உத்தரவிட்டார்.
முன்னுரிமை
அதிபர் டிரம்ப் அரசியல் சட்டம் தனக்கு அளித்துள்ள அதிகார வரம்பை மீறி இந்த தடையை விதித்ததாகவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் நிம்மதியடைந்து உள்ளனர்.இதற்கிடையே 'அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் எச் - 1பி விசா வழங்கும் முறையில் மாற்றம் செய்யக் கோரி அமெரிக்க பார்லி மென்டின் பிரதிநிதிகள் சபையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வறுமையில் வாடும்இந்தியர்கள்
அமெரிக்காவில் 42 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 6.5 சதவீதம் பேர் வறுமையில் வாடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.