கோவை; கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இயக்கப்படும் வாடகை கார்களுக்காக, மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதத்தில், வாடகையாக மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக செலவிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில், கமிஷனர் மற்றும் துணை கமிஷனர்களுக்கு மட்டுமின்றி, துறை தலைவர்கள் மற்றும் உதவி கமிஷனர்களுக்கு ஜீப் வழங்கப்பட்டுள்ளது.மற்ற அலுவலர்கள், சொந்த வாகனத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது நகரின் பல்வேறு பகுதியில் தொற்று பரவியுள்ளது. மேலும் பரவாமல் தடுக்கவும், சுகாதாரப் பணி மேற்கொள்ளவும் குழுக்கள் அமைத்துள்ளதால், பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக, வாடகை கார் கொடுக்கப்பட்டுள்ளது.

மண்டல சுகாதார அலுவலர்கள், மருத்துவ குழுவினர், நடமாடும் மருத்துவ குழுவினர், கண்காணிப்பு அலுவலர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள் என, 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாடகை கார் பயன்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த வாடகையாக, நாளொன்றுக்கு, ரூ.2,000-2,400 வரை வழங்கப்படுகிறது. அதாவது, கார்களுக்கு வாடகையாக மட்டும், மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவிடப்படுகிறது.
கடந்த ஆறு மாதத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக, செலவு செய்யப்பட்டு உள்ளது.இதில், கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தும் வாகனங்கள் செலவு; கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் வாகனங்கள் இயக்கும் செலவு தனி கணக்கு.வாடகை கார்கள் ஒதுக்கீடு செய்துள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரிடமும் சொந்த கார்கள் உள்ளன. இதுவரை அவற்றை பயன்படுத்தி வந்தவர்கள், இப்போது அவற்றை வீட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு, மாநகராட்சி செலவில், மக்களின் வரிப்பணத்தில் நகரில் உலா வருகின்றனர்.
இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கே கார் ஒதுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் நிர்ணயித்த தொகையே வழங்கப்படுகிறது' என்றனர்.
தொற்று பரவும் இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற தேவையற்ற செலவினங்களை தவிர்க்க, மாநகராட்சி உயரதிகாரிகள் முன்வர வேண்டும். ஒவ்வொரு அதிகாரிக்கும் பணி பொறுப்புக்கு ஏற்ப, டீசல் ஒதுக்கீடு செய்து, அவர்களது சொந்த கார்களை பயன்படுத்த அறிவுறுத்தினால், தேவையற்ற செலவினத்தை தவிர்க்கலாம்.