மும்பை: நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்தவர்கள், ராகுல் தாக்கப்பட்டது குறித்து பேசாமல் மவுனம் காப்பது ஏன் என சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் கேள்வியெழுப்பினார்.
உ.பி., மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண், டில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பெண் உடலை, போலீசார் ஹத்ராசுக்கு இரவோடு இரவாக கொண்டு சென்று போலீசார் தகனம் செய்தனர்.

அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து நடந்து செல்ல முயன்ற ராகுலை தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் கீழே விழுந்தார். இந்த சம்பவம் குறித்து சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தடை உத்தரவை மீறிச்சென்றதால் ராகுலைக் கைது செய்திருக்கலாமே தவிர, அவரது சட்டையின் காலரைப்பிடித்து இழுத்து, தரையில் தள்ளிவிட்டிருக்கக்கூடாது. ராகுல் மீதான போலீஸ் தாக்குதல், ஜனநாயகம் மீதான கூட்டுப் பலாத்காரம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நடிகையின் வீடு மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டபோது வானமே இடிந்து விழுந்த மாதிரி, மஹாராஷ்டிர அரசைக் குறி வைத்துத் தாக்கியவர்கள் இப்போது ராகுல் தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் குரல் கொடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் விதிமீறி கட்டப்பட்டதாக மும்பையில் நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிக்கப்பட்ட போது, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், சிவசேனா கூட்டணி அரசைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE