'அப்பா... பயமாஇருக்கு, ஐயாம் சாரி! ஒருவேளை, 'சீட்' கிடைக்கலன்னா, நீங்க எல்லாருமே ஏமாந்துருவீங்க. சாரி அம்மா, சாரி அப்பா...' என்ற, மாணவியின், 'ஆடியோ' பதிவு குரலை, சமூக வலைதளங்களில் கேட்போரின் கண்கள் ஈரமாகி விடுகின்றன. கடந்த, செப்., 12ல் மட்டும், ஒரே நாளில், 'நீட்' தேர்வின் அச்சம் காரணமாக, மூன்று இளம் தளிர்கள், தங்களை மாய்த்துக் கொண்டனர். எத்தனையோ கொடுமையான மரணங்களை கடந்து சென்ற நம் மனம், இக்கொடுமைகளை, தற்கொலை என்று எண்ணத் தோன்றவில்லை. அந்த மாணவியின் குரல், இன்னும் நம் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு கேளாமல் இருப்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.
மாற்றுக் கருத்தில்லை
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், கிராமப்புற மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் சிரமப்படுகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, எதையும் எதிர்கொள்ள தேவையான தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் மாணவர்களுக்கு கொடுக்க தவறி விட்டோமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. பொத்தி பொத்தி வளர்த்து, வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து, தோழனை போல் தோள் கொடுத்து பழகிய நாம், 'மருத்துவம் மட்டுமே வாழ்க்கையல்ல' என்பதை சொல்லி தர மறந்து விட்டோமா...குழந்தைகளாய் இருக்கும் போது, 'ஸ்டெத்தாஸ்கோப்'பை கழுத்தில் மாட்டி, அழகு பார்த்த நாம், அதுவே துாக்கு கயிறாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. 'மருத்துவம் இல்லையென்றால், இந்த உலகில் சாதிப்பதற்கு ஆயிரம் துறைகள் உண்டு. கல்லெறிந்து பார்ப்போம்... கிடைத்தால் பழம்; இல்லையென்றால் அடுத்த மரத்தை பார்ப்போம்' என்று பிள்ளைகளிடம் சொல்ல மறந்து விட்டோமா...
பெற்றோரின் கனவு, எதிர்பார்ப்பு, அதற்காக அவர்கள் செலவிடும் பணம், காலம் மற்றும் மெனக்கெடும் சிரமங்களை பார்த்து, அதற்கு கைமாறாக வெற்றியை பெற்றே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு பிள்ளைகள் தள்ளப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பில், 450க்கு மேல்; பிளஸ் 2வில், 500க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களின் ஆசையும், பெற்றோர் கனவும், மருத்துவத்தை நோக்கியே செல்கிறது; இதில், உற்றார், உறவினரின் உசுப்பேத்துதல் வேறு.அத்தை மகன், சித்தி மகள் என்று சுட்டிக்காட்டி, 'அவர்கள் எல்லாம் டாக்டராகி, வாழ்க்கையில் உயர்ந்து விட்டனர்' என்று அடிக்கடி சொல்லிக் காட்டுகின்றனர்.
சிறு வயது முதலே, 'மருத்துவம் தான், உயர்ந்த படிப்பு; படித்து விட்டால் அனைத்து வசதிகளையும் பெற்று விடலாம்' என்று, பெற்றோரும், சமுதாயமும் சொல்லி சொல்லியே, மாணவர்களின் உச்சபட்ச கனவாக, மருத்துவம் மாறி விட்டது. ஆனால் உண்மையில், பெரும்பாலான டாக்டர்கள், நடுத்தர வசதியுடன் தான் உள்ளனர் என்பது தான் எதார்த்தம்.டாக்டர் தொழிலைக் காட்டிலும், வேறு துறைகளில் உயர்ந்தவர்கள், அவர்களின் நன்மதிப்பு, பேர், புகழ் என, வெற்றி பெற்றவர்களை எடுத்துக்காட்டாக சொல்லி, பிள்ளைகளை பெற்றோர் வளர்த்திருக்க
வேண்டும்.போதாக்குறைக்கு, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத அரசியல் தலைவர்கள் சிலர், தங்கள் பெயருக்கு முன், 'டாக்டர்' என்று போட்டுக் கொள்கின்றனர்; டாக்டர் என்றே அழைக்கப்படுகின்றனர்.அவர்கள் போட்டுக் கொள்வது, உண்மையான, மருத்துவம் பார்க்கும் டாக்டர் பட்டம் அல்ல; டாக்டர் போன்ற கவுரவத்தை அளிக்கும் கவுரவ பட்டம் என்பதை, இளம் மாணவர்களில் சிலர் மட்டுமே அறிவர்.
இதுபோன்ற பல காரணங்களால், டாக்டர் என்ற பட்டத்திற்கு, சமூகத்தில் மதிப்பு அதிகம் உள்ளது. எப்படியாவது, தங்கள் குழந்தைகளும், டாக்டர்களாகி விட வேண்டும் என்ற ஆசை, மக்கள் மத்தியில் உள்ளது.கடந்த ஆண்டு, குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் மருத்துவத்தை தவற விட்ட மாணவர்கள், மேலும் முயற்சிக்கும் போது, 'இந்தாண்டு உறுதியாக வெற்றி பெற்று விடுவாய்...' என்று, பெற்றோரும், உறவினர்களும் உறுதியாக
கூறுகின்றனர். இந்த நம்பிக்கை, பதின்ம வயது பிள்ளைகளிடம் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. தன்னம்பிக்கை பயிர் விளையும் போதே, களை போன்ற, எதிர்மறை எண்ணங்களும் தோன்ற ஆரம்பிக்கின்றன.
கலகலப்பூட்ட வேண்டும்
இந்த நேரத்தில் தான், 'மருத்துவத்திற்கு முயற்சி செய்; இல்லையென்றால் ஆயிரம் துறைகள், உன் திறமைக்காக காத்துக் கிடக்கின்றன. கிடைக்காவிட்டால் அதில் ஜொலித்து விடலாம். உன் திறமை மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது...' என்று, மாணவர்களை, பெற்றோர் கலகலப்பூட்ட வேண்டும். இக்கால கட்டத்தில், குழந்தைகளை தனிமையில் விடக்கூடாது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை தாண்டி, இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையையும், தோல்விகளை தாங்கும் மனப்பக்குவத்தையும், இந்த சமுதாயமும், கல்விமுறையும் கற்றுத்தர வேண்டும்.கண் பார்வையற்ற மாணவி ஒருவர், சமீபத்தில், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று சாதித்திருக்கிறார். பட்டப்படிப்பை கூட, அஞ்சல் வழியே பயின்று, தொடர் முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பலரை குறிப்பிட்டு சொல்லலாம்.அகில இந்திய ஆட்சி பணி தேர்வில், நான்கைந்து முறை தோல்வி அடைந்தவர்கள் கூட, மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி பெற்றிருக்கின்றனர்.
வெற்றி - தோல்வியை சமமாக பாவித்து, ஒவ்வொரு தோல்வியின் போதும், புதுப்பாடத்தை கற்றுக் கொள்கின்றனர். இது, அவர்களின் பக்குவமான வயதை சார்ந்தது. நீட் தேர்வு அச்சம் காரணமாக, இறந்த மாணவர்களோ, வளர் இளம் பருவத்தை சேர்ந்தவர்கள். பொதுவாகவே, இந்தப் பருவ பிள்ளைகளை ஒருவித கண்காணிப்பில் வைக்க வேண்டும்; பதற்றம், மன அழுத்தம், எளிதாக கிடைக்க வேண்டும் என்ற மனப்போக்கு உடையவர்கள்; அறிவுரை சொல்லும் பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ குழந்தைகள் வெறுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தில் ஒன்றிரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால், வறுமை, தோல்வி, ஏமாற்றம் தெரியாமல் வளர்க்கிறோம்.
வெற்றியின் சுவையை ரசிக்க கற்றுக் கொடுத்தோம்; தோல்வியின் வலியை, வெற்றியாக மாற்றும் சக்தியை புரிய வைக்க தவறி விட்டோமே...போதாக்குறைக்கு, தற்கொலையை ஊக்குவிக்கும் வகையில் பேசும் அரசியல் தலைவர்களை கண்டுகொள்ளாமல் இருக்க, நம் பிஞ்சுகளை பழக்கப்படுத்தவும் தவறி விட்டோம்.பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்கள் பெற, பல லட்சங்களை கொட்டி, பள்ளிகளில் தேடிப்பிடித்து சேர்த்தோம். வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்க புத்தகங்களை அல்லது பயிற்சி நிலையங்களை தேடினோமா... இல்லை! தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அச்சம் தவிர்த்தல், தோல்வியை கண்டு துவளாமை போன்றவற்றிற்கு, தேர்வுகளும் இல்லை; மதிப்பெண்களும் இல்லை.
உறவுகளிடம் நமக்கு மேலானவர்களையே சுட்டிக்காட்டுகிறோம். கல்வி, வேலை, அந்தஸ்து, புகழ், செல்வம், வருமானம் இவற்றை வைத்தே, மற்றவர்களை மதிக்க துவங்குகிறோம். படிக்காத மேதைகள், ஏழை விவசாயிகள், கள்ளம், கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட பாமரன், எளிய வாழ்க்கையோடு, மனித தன்மையோடு வாழ்கிறானே... அவர்களை பற்றி பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறோமா?'தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு நிவாரண தொகை கொடுப்பது, தற்கொலையை ஊக்குவிப்பது போன்றது' என்று, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அனிதா என்ற மாணவி மரணத்தின் போது, 'இனிமேல், மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அரசால், கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும்; இனிமேல், இது போன்ற மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்' என்று, நீதிமன்றம்அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தற்கொலைகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்த படியே தான் இருக்கின்றன.
வாழ்க்கை ஒளிமயமாகும்
இதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூட தொடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று பெற்றோர் நினைப்பது தவறொன்றும் இல்லை. அதே சமயம், மருத்துவப் படிப்பை மட்டும், உச்சபட்ச கனவாக நினைக்க வேண்டியதில்லை. அதிலும், தமிழக கல்லுாரிகளில், நீட் தேர்வின் காரணமாக மருத்துவம் படிக்க முடியவில்லை என்று கருதிய பெற்றோர்களில் சிலர், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, வங்கதேசம் போன்ற நாடுகளை தேடிப்பிடித்து மாணவர்களை சேர்க்கின்றனர்.
பெற்றோரின் ஆசைகளையும், கனவுகளையும் பிள்ளைகளின் மேல் திணிக்கும் போது, அவர்களுக்கு குறிக்கோளாக தெரியாமல், சுமையாக தான் தெரியும். எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் தனித்தன்மையுடன் சிறப்பாக உழைத்தால், கண்டிப்பாக வாழ்க்கை ஒளிமயமாகும்!தொடர்புக்கு: ச.மாரியப்பன், முதுகலை ஆசிரியர், இ - மெயில்: mariyappan27041971@gmail.com மொபைல் போன்: 94869 44264
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE