மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சுற்றுப்பயணம், பெண் தொண்டர்களுக்கு சுயபாதுகாப்பு பயிற்சி, தலைமைச் செயலக முற்றுகை என, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக, மிகப்பெரிய திட்டங்களுடன், அக்டோபர் மாதம் முழுவதையும் பயன்படுத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகளின் போது, மேற்கு வங்க மாநிலத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், 18 இடங்களில் வெற்றி பெற்று, அனைத்து தரப்பையும், பா.ஜ., ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.அந்த வெற்றி தந்தஉற்சாகத்தை, அப்படியே தொடர்ந்து, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலிலும், திரிணமுல் காங்கிரசை வீழ்த்தியாக வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ., மேலிடம் உள்ளது.
மேலிடம் திட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில், அக்டோபர் மாதத்தில் நடக்கும் துர்கா பூஜை விழா, மிகவும் பிரபலம். எனவே, இந்த ஆண்டுக்கான துர்கா பூஜை கொண்டாட்டங்களை, மிகச்சரியாக பயன்படுத்த, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.இதன்படி, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன், திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேற்கு வங்கத்தில், பா.ஜ., மற்றும் திரிணமுல் தொண்டர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன; இதில், பா.ஜ., தொண்டர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு தீர்வாக, பா.ஜ., மகளிர் அணி சார்பில், காந்தி ஜெயந்தி அன்று, சுயபாதுகாப்பு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, 23 மாவட்டங்களிலிருந்து, 50 பெண் நிர்வாகிகள், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து, பயிற்சி பெறும் இவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் கிராமங்களுக்குச் சென்று, மேலும் பல பெண்களுக்கு, தற்காப்பு கலைகளை கற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டுப்பதிவு நாளின்போது, திரிணமுல் கட்சியினரை சமாளிக்கும் விதமாக, பல்வேறு பயிற்சிகளும் தரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும், 8ல், பா.ஜ., இளைஞரணி சார்பில், கோல்கட்டாவில் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடக்கஉள்ளது.
தேக்கம்
வேலையின்மை பிரச்னையை முன்வைத்து நடக்கவுள்ள இந்த போராட்டத்தில், டில்லியிலிருந்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். ஆம்பன் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு, உரிய நிவாரண உதவிகளை செய்வதில், மாநில அரசின் நிர்வாகத்தில் தேக்கம் நிலவுகிறது.இதை மையமாக வைத்து, மாநில அரசை கண்டித்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், பிரமாண்ட போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ., - எம்.பி.,க் களின் தலைமையில், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும், விவசாயிகளின் நலன்கள் தொடர்பான ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என, மம்தா பானர்ஜி அரசுக்கு பெரும் குடைச்சல் கொடுக்க திட்டமிட்டுள்ள, பா.ஜ., அடுத்த இரு மாதங்களில், வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்து, ஆச்சரியப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
விரைவில் நேரடி விசிட்!
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், மேற்கு வங்கத்தில் நடக்கவுள்ள துர்கா பூஜை நிகழ்ச்சிகளில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கவுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள அவர், முதன்முறையாக டில்லிக்கு வெளியே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது, இதுவே முதல்முறை.தேதி முடிவானதும், அமித் ஷா மேற்கு வங்கம் செல்லும் போது, துர்கா பூஜை பந்தல்களின் வாயிலாக, உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை, அவர் துவக்கி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.
தீவிர ஆலோசனை
நேற்று முன்தினம் டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலிடத் தலைவர்கள் மற்றும் மேற்கு வங்க, பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களோடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்றார்.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நடந்த இந்த ஆலோசனையில், மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான, அனைத்து பொறுப்பையும் அமித் ஷாவிடம் ஒப்படைத்து, அவரது நேரடி கண்காணிப்பிலேயே அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. - நமது டில்லி நிருபர் -