பெரியகுளம்: தேனி, பெரியகுளம், கைலாசபட்டி பண்ணை வீட்டில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். அவர்களிடம், 'கட்சி நலன் கருதி, நல்ல முடிவு எடுக்கப்படும்' என, பன்னீர்செல்வம் கூறியுள்ளதால், அவரது முடிவில் மாற்றம் வரும் என, தெரிகிறது.
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இடையே, போட்டி ஏற்பட்டுள்ளது. 'வரும், 7 ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்' என, அக்கட்சி அறிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் நேற்று முன்தினம்(அக்.,2) இரவு, பெரியகுளம் வந்தார்.
நேற்று(அக்., 3) காலை, கைலாசபட்டி பண்ணை வீட்டில் இருந்த அவரை, தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், கம்பம் எம்.எல்.ஏ., ஜக்கையன் ஆகியோர் சந்தித்து பேசினர். பின், சென்னை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, திருவாரூர் உட்பட, பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் சந்தித்து பேசினர். அப்போது, 'ஜெ.,வால் அடையாளம் காட்டப்பட்ட நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியதாக, பன்னீர் ஆதரவாளர்கள் கூறினர்.
அவர்கள் கூறியதாவது:
இக்கட்டான சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான், பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்தார். இவரை, 'விசுவாச முதல்வர்' என, ஜெ., பாராட்டினார். இது, கட்சி தலைமை நிர்வாகி முதல், கடைசி தொண்டர் வரை தெரியும்.
அ.தி.மு.க., மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்க, நீங்கள் முதல்வர் வேட்பாளராக வேண்டும். கட்சி வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என, அவரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர், 'கட்சியின் நலன் கருதி, நல்ல முடிவு எடுக்கப்படும்' என தெரிவித்தார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கட்சி நலன் கருதி முடிவு எடுக்கப் போவதாக, பன்னீர் கூறியிருப்பதால், அ.தி.மு.க.,வில் பிளவையோ, பிரச்னையையோ, அவர் ஏற்படுத்தப் போவதில்லை என, தெரிகிறது. எனவே, அவரது முடிவில், 7ம் தேதிக்குள் மாற்றம் வரலாம் என, கூறப்படுகிறது.